சென்னை:சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், நேற்று (நவ.15) “பழங்குடியினர் பெருமை தினம்" மற்றும் "ஜார்கண்ட் மாநிலம் உருவான தின விழா” கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து, பிர்சா முண்டாவின் பிறந்த தினம், ஜன்ஜாதிய கௌரவ தினம் எனப்படும் பழங்குடியினர் பெருமை தினமாக கடைபிடிக்கப்படுவதையொட்டி, அவரது உருவப் படத்திற்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, “சுதந்திர இயக்கத்தில் நமது பழங்குடியின சகோதர, சகோதரிகளின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் தரும் வகையிலும், அவர்களின் எதிர்கால உரிமை உறுதிபடுத்தப்படுவதை குறிக்கும் வகையிலும் இவ்விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தினத்தை, ஜன்ஜாதி மக்களுக்கு (பழங்குடியினருக்கு) பெருமை சேர்க்கும் நாளாக, பழங்குடியினர் கெளரவ தினமாக கொண்டாடியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி.
நமது நாட்டின் பன்முக கலாச்சாரம் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தொடர்ச்சியாக சென்று வருகிறது. அதன் மூலம், அதில் ஒற்றுமை நிலவுவதை காண்கிறோம். மாநிலங்களின் உருவாக்கம் என்பது பாரதத்தின் அரசியல் மற்றும் நிர்வாக எல்லைக்காக மறுவரையறை செய்யப்பட்டது.
அந்த வகையில், நமது பழமையான மாநிலங்கள் 100 ஆண்டுகளை எட்டவில்லை. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் சிறந்த நிர்வாகத்திற்காக புதிய மாநிலங்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கும். ஒரு மாநிலத்தின் மாநில தினத்தை கொண்டாடும்போது, அதன் கூடவே நம் நாட்டின் பன்முகத்தன்மையையும் நாம் கொண்டாடுகிறோம்.
மாநில தினங்கள் அந்தந்த மாநிலத்தின் எல்லைகளைத் தாண்டி, இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகின்றன. துரதிஷ்டவசமாக, இன்று நமது அடையாளம் என்பது, நாம் பூர்வீகமாகக் கொண்டுள்ள இடத்தை வைத்து அறியப்படுகிறது. மாநிலத்தை மையமாகக் கொண்டு அடையாள உணர்வு மக்களிடையே மேலோங்கி வருகிறது. இந்த காலத்தில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர், மற்ற மாநிலங்களின் அழகு, வளம், புவியியல் மற்றும் கலாச்சாரம் பற்றி அறியாதவராகி விடுகிறார்.
நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் மக்களின் ரத்தம், வியர்வை, துன்பம் ஆகியவற்றின் அடிப்படையில் பெரும் விலை கொடுத்து நம் நாடு சுதந்திரமடைந்தது. துரதிஷ்டவசமாக, நாம் அந்த தியாகிகளை மறக்க ஆரம்பித்தோம். தேசிய சுதந்திர இயக்கம் நம் நினைவிலிருந்து மறையத் தொடங்கியது. தேசிய சுதந்திரப் போராட்டத்தில் நமது பழங்குடியினரின் பங்களிப்பு மகத்தானது.