சென்னை:தமிழக அரசுத் தரப்பில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருந்த 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் தொடர்ந்து அரசியல் ரீதியான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட, தமிழக அரசு தரப்பில் இருந்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இதனால், சமீபத்தில் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
நவம்பர் 10ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது நீண்டகாலமாக மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பது கவலை தெரிவித்த நீதிபதி, மசோதாக்களை நீண்ட காலமாகக் கிடப்பில் போடக்கூடாது என அறிவுறுத்தினார். இந்நிலையில் நீண்ட நாட்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருந்த மசோதாக்களில் சில விளக்கங்களைக் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இதன்படி,
- சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
- தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா ஆகிய மசோதாக்கள் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.