தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்து போட மாட்டேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி!

நீட் விலக்கு மசோதாவிற்கு நான் எந்த காலத்திலும் கையெழுத்து போட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ravi
நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்து போட மாட்டேன்

By

Published : Aug 12, 2023, 4:01 PM IST

சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் மாளிகையில் இன்று (ஆக.12) கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "உங்களுடைய வெற்றியைக் கொண்டாடுகிறோம் எனவும், உறுதியுடன் கடினமாக உழைத்ததன் மூலம் வெற்றி பெற்றுள்ளீர்கள். பிரபஞ்சன் சொன்னது போல உங்களை நீங்களே நம்பி வெற்றி பெற்றுள்ளீர்கள். நீட் தேர்வில் வெற்றி பெறுவது சாதாரணமானது அல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு ஒரு உதாரணம். நமது மாநிலத்தின் தரமான கல்வி நாட்டில் மற்ற பகுதியில் உள்ள மாணவர்களை பொறாமை கொள்ள செய்யும். ஆனால், நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் போட்டி போட முடியாது என்ற வாதங்களை சொல்கின்றனர்.

மேலும், தேசிய அளவை விட நமது மாநிலத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் சதவீதம் அதிகம். ஆனால், இது போதாது. அடிப்படைக் கல்வி மட்டுமே போதாது. தரமான உயர்கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இந்தியாவின் முதல் பிரதமர் இந்தியாவில் அனைவரது வீடுகளிலும் மிதிவண்டி இருக்கும் அளவிற்கு வளரும் எனக் கூறினார். அப்போதெல்லாம் திருமணத்திற்கு வரதட்சணையாக மிதிவண்டி வாங்கிய நிலை உண்டு. இன்று மிதிவண்டி பொருளாதார குறியீடாக சொன்னால் நகைப்பாக இருக்கும். அது போல, தான் தற்போது போட்டித் தேர்வுகள் வேண்டாம் என்பது வருங்காலத்தில் நகைப்புக்கு உரியதாக இருக்கும்.

கடந்த காலங்களில் மாணவர்கள் தற்கொலைகள் செய்தனர் தேர்வைக் கண்டு ஒரு பயந்த மனநிலையை மாணவர்களிடம் ஏற்படுத்தினர். பலர் வெற்றி பெற முடியாது என அழுதனர். ஆனால், இன்று நமது மாநிலத்தில் இருந்து ஒரு மாணவர் நாட்டிலேயே முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. அதிக மருத்துவ படிப்பிற்கான இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு தரமான மருத்துவம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாட்டை நலமான மக்கள் தொகை கொண்ட நாடக மாற்ற அரசு தீவிர முயற்சியை எடுத்து வருகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் உடன் வெற்றி பெறுவது உங்கள் வாழ்வில் ஒரு மைல்கல். தற்போது அடுத்த அத்தியாயம் தொடங்குகிறது. நீங்கள் வெற்றி களைப்பில் தேங்கி விடக்கூடாது. தொடர்ந்து இதே போன்ற முயற்சியில் மருத்துவம் படிக்க வேண்டும். மருத்துவரை அணுகும் மக்கள் அவர் சொல்வதை அப்படியே பின்பற்றுவார்கள். அந்தளவிற்கு மருத்துவர்களை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை மனதில் வைத்து கடினமான மருத்துவத்தை நீங்கள் படிக்க வேண்டும்.

மேலும், சிறந்த மருத்துவராக உருவாக, உங்களை நீங்களே முதலீடு செய்யுங்கள். நன்கு படித்து அதிக மதிப்பெண் எடுத்து சிறந்த மருத்துவராக வெளியே வாருங்கள். உங்களது உடல் நலனில் அக்கறை கொள்வதும் முக்கியம். இந்தியாவில் மருத்துவ சுற்றுலா அதிகரித்துள்ளது காரணம் நமது மருத்துவர்கள் சிறந்த மருத்துவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் மனிதநேயத்துடன் நோயாளிகளை பார்த்துக்கொள்கின்றனர். சிறந்த சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி மனித நேயத்துடன் அக்கறை எடுத்துக்கொள்வதுமே இதற்கு காரணம்.

மேலும், பங்களாதேஷ், பாகிஸ்தான், மிடில் ஈஸ்ட் போன்ற நாடுகளில் இருந்து மருத்துவம் பெறுவதற்காக சென்னை வருகின்றனர். அந்தளவிற்கு நமது மருத்துவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து வருவதை கூட என்னால் பார்க்க முடிகிறது. அமெரிக்க மருத்துவர்களுக்கு இணையான குறைந்த செலவில் மருத்துவத்தை நமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். உங்கள் பள்ளிக்கு அடிக்கடி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செல்லுங்கள். நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள் என்பதை உங்களுக்கு அடுத்து வரும் மாணவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்" எனக் கூறினார்.

மேலும், நீட் தேர்விற்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள் என மாணவரின் தந்தை ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், "நீட் தேர்விற்கு நான் எப்போதும் தடை கொடுக்க மாட்டேன். இது பொது பட்டியலில் உள்ளதால் குடியரசு தலைவர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியம் இல்லை. பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கும் மாணவர்களைத் தயார் செய்யலாம். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது மாணவர்கள் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும்.

மேலும், நீட் தேர்வுக்கு முன்னர் எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்விற்கு பின்னர் எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பதை ஒப்பிட்டு பார்த்தால் நீட் தேர்விற்கு பின்னரே அதிக நபர்கள் சேர்ந்துள்ளனர். நீட் தேர்விற்கு அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையிலேயே இது உள்ளது. கடந்த அரசு நீட் தேர்வுக்கு 7.5 இடஒதுக்கீடு கொடுத்த பின்னர் தற்போது 600 மாணவர்கள் மருத்துவர்கள் ஆகின்றனர். கடந்த ஒரு வருடமாக நீட் தேர்வு தொடர்பாக எந்த தற்கொலையும் நடைபெறவில்லை.

ஆனால், முன்பெல்லாம் நீட் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறுவதும், ஒரு கட்சி தலைவர் 10 லட்சமும் இன்னொரு கட்சி தலைவர் 20 லட்சம் வழங்குவதும் வழக்கமாக வைத்திருந்தனர். அரசியல்வாதிகளின், அரசியலுக்கு மாணவர்கள் பலியானார்கள். நீட் தொடர்பான தவறான புரிதலை கைவிட வேண்டும். நீட் தேர்வு மாணவர்களை போட்டி திறன் கொண்டவர்களாக உருவாக்குகிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க:ஊட்டியில் இருந்து சாலைமார்க்கமாக வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி - தோடர் பழங்குடியின மக்களுடன் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details