சென்னை:உலக மனநல சுகாதார தினத்தையொட்டி சென்னை, ராஜ் பவனில் இன்று நடைபெற்ற ஆளுநரின் எண்ணித்துணிக
பகுதி 11 நிகழ்ச்சி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாஸ்டர் மைண்ட் ஃபவுண்டேஷன் (எம்எம்எஃப்) ஏற்பாடு செய்திருந்தது.
மனநல சுகாதார சேவையில் சிறப்புற்று விளங்கும் ஆளுமைகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி மனநல சவால்களை எதிர்கொள்வோருக்கு சிறந்த முறையில் சேவையாற்றும் மக்கள், அமைப்புகள் மற்றும் கலாசார நிகழ்வில் பங்கேற்ற சிறப்புக் குழந்தைகள் மற்றும் மாணவர்களையும் சிறப்பித்தார்.
பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி., “நமது மக்கள்தொகையில் கணிசமானோர் மனநல பிரச்சனைகளை கொண்டுள்ளனர். இந்த பிரச்சனை மிகவும் பெரியது. நம் நாட்டில் ஆண்டுதோறும் பல ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். வெளிப்படையாக சாதாரண தோற்றமுடைய ஒருவர் தற்கொலை செய்து கொள்வது மனநலம் என்ற பிரிவின் கீழ் வரத் தகுதியற்றது. அசாதாரண அறிவுசார் நடத்தைக்கு வழிவகுக்கும் ‘மன அழுத்தம்’ இயல்பாக தோன்றுவோரிடையே பொதுவானதாக இருக்கிறது.
இன்றும் கூட, மனநல மருத்துவர் அல்லது உளவியலாளரிடம் சென்று ஒருவர் ஆலோசனை பெறுவது இந்த சமூகத்தில் பலரால் ஒரு களங்கமாக கருதப்படுகிறது. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இந்த வகை சவால்களை எதிர்கொள்வோருக்கு வழங்கப்படும் சிகிச்சை வரம்புகளைக் கொண்டுள்ளது. ஏனெனில் இது மனித மனதை ஒரு பொருளாக, ஒரு ரசாயன எதிர்வினையாகக் கருதும் நமது புரிதலின் அடிப்படையில் உள்ளது.
மேலும், நமது ஐரோப்பிய அறிவுமுறையின் வெளிப்பாடாகவே மனநலம் குறித்த பொதுவான அணுகுமுறை உள்ளது. அதுவே இப்போதும் நடைமுறையில் உள்ளது. ஆனால், ஐரோப்பிய அறிவுமுறையும் இந்திய அறிவு முறையும் அடிப்படையில் மாறுபட்ட அணுகுமுறைகளை கொண்டவை. ஐரோப்பிய அறிவு முறை என்பது, நமது வரையறுக்கப்பட்ட புலன்கள் மற்றும் அறிவுசார் திறன்களின் அடிப்படையில் மனிதர்களை பௌதிக உடலாகக் கருதுகிறது.
ஆனால், இதை கடந்து பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட களங்கள் உள்ளன. அவை சித்தவியல் (பாராசைகாலஜி) அல்லது மெட்டாபிசிக்ஸ் என வகைப்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய அறிவுமுறைக்கு நேர்மாறாக, நமது இந்திய அறிவுமுறையில் ஒரு தனிநபருக்கான அணுகுமுறை முழுமையானது. இது ஒரு தனிநபரை உடலியல், அறிவுசார்பியல் மற்றும் ஆன்மிகம் என மூன்று கூறுகளாகக் கொண்டிருக்கிறது. இவை அநுபூதி என்று நாம் அழைக்கும் நமது வரையறுக்கப்பட்ட புலன்களுக்கு அப்பால் மட்டுமே அனுபவிக்கக்கூடிய விஷயங்கள்.