சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட சொற்றொடர்களை தவிர்த்திருந்தார். அவர் உரை முடிந்த பிறகு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அரசு கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
அதேபோல், உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவை நிகழ்வுகள் முடியும் முன்னதாகவே பேரவையில் இருந்து கிளம்பினார். இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று(ஜன.13) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, "சமுக நீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய துணை கண்டமே உணர்ந்துவிட்டது. மக்களின் நலன் மட்டுமே நமது சிந்தனையில் நின்றது, அதுவே மக்கள் மனதை வென்றது. காலம் குறைவு. ஆனால், ஆற்றியுள்ள பணிகள் அதிகம்.