சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி செயல்பாடுகள் மற்றும் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'இந்த ஆண்டு அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு கலைக்கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 17.88 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் காலியிடங்களே இல்லாத வகையில் பல்வேறு புதிய முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் புதிதாக 21 புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரியில் பொறியியல் பாடங்களைப் பொறுத்தவரை 2ஆவது செமஸ்டர் மற்றும் 4ஆவது செமஸ்டர் ஆகியவற்றுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அடுத்தாண்டு ஒன்றாம் செமஸ்டர் மற்றும் 3ஆவது செமஸ்டர் பாடத்திட்டங்களும் மாற்றம் செய்யப்படும்.