நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.
விழாவில் பேசிய ரஜினிகாந்த், “என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” என்று கூறினார். மேலும், “தாதா சாகேப் விருதை மறைந்த இயக்குநர் கே. பாலசந்தருக்கு சமர்பிக்கிறேன்” என்றும் கூறினார்.
இந்நிலையில், திரைப்பிரபலங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், " இந்நாள், திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதொரு பொன்னாளாகும்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து இந்திய திரைத்துறையில் தங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக, இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான மற்றும் வெகு சிலருக்கே கிடைக்கப்பெற்ற அங்கீகாரமான தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியத் திரை உலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் தங்களின் தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர். நீங்கள் நல்ல உடல்நலத்தோடு ஆண்டுகள் பல நீடூடி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார் ரஜினிகாந்த்!