சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மாநகராட்சி நிர்வாகத்துடன் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த 87 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக ஆகஸ்ட் இரண்டாம் தேதி சென்றபோது, அங்கு அவருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையில் அவருக்கு லேசான கரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் ஆளுநர் மாளிகையிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு, மருத்துவமனை நிர்வாகம் அறிவுரை வழங்கியது. அதனைத்தொடர்ந்து ராஜ் பவனில் ஆளுநர் சுய தனிமைப்படுத்துதலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு கரோனா தொற்று சாதாரண அறிகுறிகள் தொடர்ந்து தென்படுகிறது. மேலும் அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார். தொடர்ந்து காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருகின்றனர்' எனத் தெரிவித்துள்ளது.