சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களுக்கு விடுப்பு வேண்டுமென்றால் தலைமை ஆசிரியரிடம் விடுப்பு விண்ணப்பம் எழுதி ஒப்படைப்பார்கள். அதன் பின்னர் அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பை வருகைப்பதிவேடு மாற்றுவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபோன்ற தலைமையாசிரியரும் குறிப்பிட்ட ஆசிரியரும் இணைந்து செய்யும் தவறுகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து விடுமுறை எடுக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆசிரியர் பள்ளிக்கு வருகை புரியாமல் தலைமையாசிரியரிடம் கூறிவிட்டு, பின்னர் விடுப்பிற்கான அனுமதி கடிதம் வழங்கும் முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தி உள்ள புதிய முறையால் ஆசிரியர்கள் முன்கூட்டியே விடுப்பிற்கான அனுமதியைப் பெற வேண்டி உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட சில ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் இணைந்து செய்யும் தவறுகள் முற்றிலும் ஒழிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.