சென்னை:இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக இத்தேர்வில் பங்கேற்ற அரசுப்பள்ளி மாணவர்களில் 80 விழுக்காட்டினர் தோல்வியடைந்திருப்பது வேதனையளிக்கிறது. மருத்துவப்படிப்பில் சேரும் அளவுக்கு இல்லாவிட்டாலும், நீட் தேர்வில் வெல்லும் அளவுக்குக்கூட அரசுப்பள்ளி மாணவர்கள் தயார்படுத்தப்படாதது கண்டிக்கத்தக்கது.
2022-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 51.20% மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இது தேசிய சராசரியான 56.30 விழுக்காட்டை விட 5.10% குறைவு ஆகும். 2020-ஆம் ஆண்டில் 57.40% ஆகவும், 2021-ஆம் ஆண்டில் 54.40% ஆகவும் இருந்த நீட் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடப்பாண்டிலும் குறைந்து இருப்பது வருத்தமளிக்கிறது. மாணவர்களின் மதிப்பெண் விகிதமும் பெருமளவில் குறைந்திருக்கிறது.
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தான் மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து நடப்பாண்டில் நீட் தேர்வு எழுதிய 1,32,167 பேரில், 12.86% மாணவர்கள் தான் அரசு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். இதுவே மிகக்குறைந்த விகிதம் ஆகும். அவர்களிலும் கூட சுமார் 80%, அதாவது 3,400 மாணவர்கள் மட்டும் தான் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களில் 720-க்கு 450 முதல் 471 மதிப்பெண் பெற்றவர்கள் வெறும் மூவர் மட்டும் தான். நடப்பாண்டில் பட்டியலினம், பழங்குடியினர் தவிர மற்ற பிரிவுகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 515-க்கும் கூடுதலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், அரசுப்பள்ளி மாணவர்களுக்காக 7.5% ஒதுக்கீடு மட்டும் இல்லாவிட்டால், அரசுப்பள்ளி மாணவர்களில் ஒருவருக்குக் கூட இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேருவது ஒருபுறம் இருக்கட்டும், நீட் தேர்வில் வெற்றி பெறும் அளவுக்குக் கூட அவர்கள் மேம்படுத்தப்படவில்லை என்பது தான் வெட்கப்பட வேண்டியதாகும். அரசு கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேர குறைந்தது 75% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
ஆனால், நடப்பாண்டில் நீட் தேர்வில் வெற்றி பெற பொதுப்பிரிவினர் 117 (16.25%) மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 93 (12.91%) மதிப்பெண்களும் எடுத்தால் போதுமானது. வெற்றிக்குத் தேவையான 12.91% மதிப்பெண்களைக் கூட எடுக்க முடியாத நிலையில் தான் அரசுப்பள்ளிகளின் மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால், இந்த அவல நிலைக்கு தமிழ்நாடு அரசு தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.