சென்னை: கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சென்னையில் கூட்டமான இடங்களையும், நீண்டதூர சாலைகளையும் கண்காணிப்பதற்காக மூன்று கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் நடமாடும் ஆளில்லா விமான காவல் பிரிவு (Drone Police Unit) அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி உள் துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே. பிரபாகர் வெளியிட்டுள்ள அரசாணையில், "நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காவல் பணியில் பொதுமக்களைப் பாதுகாப்பதில் சென்னை காவல் துறை முதன்மையாக இருக்கிறது.
3 வகையான 9 ட்ரோன்கள்
அந்த அடிப்படையில் குற்றங்களைக் குறைக்க, கண்காணிப்புப் பணியில் ஈடுபட உதவியாக இருக்கும் வகையில் ஆளில்லா விமான காவல் பிரிவு அமைக்க அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தது. குறிப்பாக முக்கியப் பிரமுகர்கள் வரும் சாலைகளில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளவும், கடற்கரையில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளவும், உயரமான கட்டடங்களில் தீ விபத்தின்போது யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய ஆளில்லா விமானத்தின் பயன்பாடு மிகவும் உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பாண்டி பஜார் ஆகிய இடங்களில் நடமாடும் ஆளில்லா விமான காவல் பிரிவு செயல்பட உள்ளது. மொத்தம் ஒன்பது ஆளில்லா விமானங்கள் (Drone) வழங்கப்பட உள்ளன.