சென்னை:ராயப்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ மோனகன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் கடந்த 6ஆம் தேதி ஆய்வு செய்தனர். ஆய்வின் போது இறுதியில் பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டன. மேலும் அங்குள்ள மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகத்திற்கும் மாவட்ட குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அலுவலருக்கும் அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் 9ஆம் தேதி, விடுதியில் உள்ள மாணவர்களை 24 மணி நேரத்தில் அப்புறப்படுத்தி வேறு விடுதிகளில் சேர்க்க வேண்டும் எனவும், இது குறித்து அறிக்கையை மூன்று நாட்களுக்குள் தேசிய ஆணையத்திற்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ மோனகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை ஆய்வு செய்தனர். அப்பொழுது விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்களில் 95 விழுக்காடு பேர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும்; ஐந்து விழுக்காடு மாணவர்கள் மட்டுமே இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும், அங்கு மதமாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அலுவலர் தெரிவித்தார்.