சென்னை: தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல், ஜவுளி, தோல் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்திகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வளர்ந்து வரும் துறைகளான மின்வாகனங்கள், சூரிய மின்சக்தி கலன்கள், காற்றாலை கலன்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதனை வளர்த்தெடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனை முதலமைச்சர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
நவீன தொழில் நுட்பங்கள் கையிலெடுப்பு
Industry 4.0 என்று அழைக்கப்படும் நான்காவது தொழில் துறை புரட்சியைப் பயன்படுத்தி அடுத்தகட்ட வளர்ச்சியை அடைய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது உற்பத்தி தொழில் துறையில் முக்கியப் பங்காற்றும் நிலையில், அடுத்து வரும் காலகட்டங்களில் தொழில் துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிக அளவில் இருக்கும். இதனால் இங்குள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் சூழலும் ஏற்படலாம். நாட்டிலேயே தமிழ்நாட்டில் அதிக அளவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளதால், இது மாநிலத்தின் பொருளாதாரத்துக்கும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம்.
மாநிலத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலம் ஐஓடி (IoT), 3டி பிரிண்டிங் போன்ற நுண்ணிய தொழில் நுட்பங்களை பயன்படுத்திப் பணிகள் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்றைய தொழில் முதலீட்டு நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தொழில் துறை 4.0-இல் கவனம் செலுத்தும் வகையில் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் டிக்டோவுடன் ஒரு திறன்மிகு மையம் (Centre of Excellence) அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
இதன் மூலம் விமான இயந்திரங்களுக்குத் தேவைப்படும் மேம்படுத்தப்பட்ட உபகரணங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்படும்" என்று கூறினார்.
புதிய தொழில் கொள்கை
தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களின் அனுபவங்களை எளிதாக்கவும் புதிதாக ஏற்றுமதிக் கொள்கை, மருந்துப் பொருட்கள், உயிரிநுட்பக் கொள்கை எனப் பல்வேறு தொழில் கொள்கைகளை வெளியிட இந்த அரசு திட்டமிட்டுள்ளது. வெறும் உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க ஒரு கொள்கை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.