தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு ஜூன் 7ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி காலை 6 மணி வரை, சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரோனா தொற்றுப்பரவல் அதிகம் இருக்கும் மாவட்டங்களான கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், அத்தியாவசிய செயல்பாடுகளுக்கும் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ஏழாம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
இதுவரை இ-பதிவு நடைமுறையை பின்பற்றி வந்த தமிழ்நாடு அரசு ஜூன் 7ஆம் தேதி முதல் சில சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் செல்ல இ-பாஸ் கட்டாயம் என தெரிவித்துள்ளது. அதன் படி நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
அதே போல் நோய் பரவல் அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு செல்பவர்களும் ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.