இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரோனா பாதிப்பு கட்டுக்குள் அடங்காமல் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், மதுக்கடைகளைத் திறப்பதில் அரசு தீவிரம் காட்டுகிறது. இது நிதிச்சுமையைச் சமாளிக்க அப்பாவி மக்களின் தலையில் நோய்ச் சுமையை ஏற்றிவைக்கும் விபரிதத்தில் போய் முடிந்துவிடும். எனவே வீண் பிடிவாதம் பிடிக்காமல் தமிழ்நாட்டில் நாளை மதுக்கடைகளைத் திறக்கும் முடிவை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தனது திறனில்லாத நிர்வாகத்தால் கரோனா நோய் பரப்பும் இடமாக கோயம்பேடு சந்தையை மாற்றிய அரசு, அடுத்ததாக மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளது. இதற்காக அனைவரையும் உளவியல் ரீதியாகதயார்படுத்துவதற்காக, தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெளிப்படையான எந்தவித அறிவிப்பும் இல்லாமல் கடந்த இரண்டு நாள்களாக மக்களை எளிதாக நடமாட அனுமதித்து வந்தார்கள்.
அதாவது மதுக்கடை திறந்த பிறகு மக்களை வெளியில் விட்டதாக தெரியக்கூடாது என்பதற்காக, இத்தகைய மோசமான நாடகத்தை அரசு அரங்கேற்றி வருகிறது. இதன்மூலம் தலைநகர் சென்னைக்கு நிகராக மற்ற ஊர்களிலும் சமமாக கரோனாவை பரப்புவதற்கான ஏற்பாடுகளை அரசே செய்து வருகிறதோ என்ற பயம் மக்களிடம் உருவாகி இருக்கிறது. டீக்கடைகளைக் கூட திறக்கக்கூடாது என்பவர்கள் மதுக்கடைகளைத் திறக்கத் துடிப்பதன் மூலம், 43 நாள்கள் மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தாலும், அரசாங்கத்தால் மதுக்கடைகளைத் திறக்காமல் இருக்க முடியாது என்பதை நிரூபிக்கும் விதமாக இருக்கிறது.
அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளைத் திறந்திருப்பதால் தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட மக்கள் அங்கே சென்று மதுவை வாங்குகிறார்கள் என்று சில அமைச்சர்கள் அரசின் முடிவை நியாயப்படுத்தி வருகிறார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வளவு கடும் பாதுகாப்பை மீறி மக்கள் எல்லை தாண்டி போக முடியுமா? அல்லது அவர்களை அரசே எல்லை தாண்ட அனுமதித்து தங்களின் மதுக்கடை திறப்பு முடிவுக்கு ஒரு காரணமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறதா?
சென்னை மாநகரக் காவல் எல்லையைத் தவிர்த்து அதன் சுற்றுப்புறங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளைத் திறக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அவர்களின் வாதத்தின்படி மாநில எல்லையையே தாண்டிச் சென்று மதுவை வாங்கமுடிந்தவர்களுக்கு, சென்னைக்கு அருகிலுள்ள மாவட்ட எல்லைகளைத் தாண்டிச்சென்று மதுவை வாங்க முடியாதா? அப்படி வாங்கினால் அதையும் திட்டமிட்டே அனுமதித்து அரசு வேடிக்கை பார்க்கப் போகிறதா?