எப்போதும் பரபரப்புடனே காணப்படும் சென்னை மாநகரவாசிகள், கடும் போக்குவரத்து, கூட்ட நெரிசல் என ஓய்வற்று கிடக்கும் சாலைகளில் குறைந்த தூர பயணத்திற்கும் அதிகப் பணம் செலவு செய்யும் நிலையிலேயே ஒவ்வொரு நாளும் கழிகிறது. இப்படியான சூழலில் ஒரு சைக்கிள் இருந்தால், குறைந்த பட்ஜெட்டிலேயே பயணச் செலவை முடித்துவிடலாம் என யோசிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்.
அதுவும் தேவைப்படும் இடத்தில் ஒரு சைக்கிளை எடுத்துச் சென்று, பயன்படுத்தியபின் அதனை மற்றொரு இடத்தில் விட்டுச் செல்லலாம் என்ற வசதி இருந்தால் இன்னும் எப்படி இருக்கும்? தற்போது அதைதான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது அரசு. தலைநகர் டெல்லி, ஹைதராபாதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஸ்மார்ட் பைக் என்பது கியர் வசதியுடன் கூடிய சைக்கிள்தான். 5000 ஸ்மார்ட் பைக்குகள் இத்திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பைக்கில் ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாயும், அதற்கு மேல் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 9 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுதவிர ஒரு நாள் பாஸ் முதல் 3 மாத பாஸ் வரை இதிலுள்ளது.
"இன்று நாமெல்லாம் கார், பைக் வைத்திருக்கிறோம், உடல் ஆரோக்கியத்திற்காக பலரும் சைக்கிளை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்" என்கிறார் ஸ்மார்ட் பைக் விரும்பி பரத். இவற்றில் கியர் வசதி உள்ளதால் வெகு தூரத்தையும் எளிமையாகக் கடந்து செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்மார்ட் பைக்குகள் அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தாலும் அதன் செயலியில் இருக்கும் சில குறைபாடுகள் மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் முதல் முறையாக ஸ்மார்ட் பைக்கைப் பயன்படுத்திய நான்சி கூறுகையில் 'க்யூஆர் கோடை' ஸ்கேன் செய்தாலும், செயலிக்குள் செல்வதற்கு சிரமமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஸ்மார்ட் பைக் உடல் நலத்திற்கு மட்டுமல்ல, பூமியின் நலனுக்கும் ஏற்றது எனக் கூறும் ஆர்ஜே. சக்தி, " ஸ்மார்ட் பைக்கை எடுத்த இடத்திலேயே திரும்ப வைக்க வேண்டும் என கட்டாயமில்லாதது வசதியாக உள்ளது. இன்றைக்கு காற்று மாசு குறித்து நாம் பேசி வருகிறோம். ஸ்மார்ட் பைக்கை பயன்படுத்துவதன் மூலம் சென்னையை காற்று மாசில்லாத நகரமாக மாற்ற முடியும்" என்றும் கூறுகிறார்.
சம்பாதிக்கும் பணத்தில் கால்வாசியை போக்குவரத்திற்கே செலவு செய்யும் நடுத்தரவர்க்கத்தினருக்கு இந்த ஸ்மார்ட் பைக் திட்டத்தினை செழுமைப் படுத்தினால் ஆட்டோ, கால்டாக்சியில் செல்லும் அவசியமும் இருக்காது, ஆட்டோ ஓட்டுநரிடம் பேரம் பேசும் வேலையும் இருக்காது. பல்வேறு வகைகளிலும் சிறந்ததாக இருக்கும் இந்தத் திட்டம், மக்களிடம் பரவலாக சென்றடையும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.