சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், தாம்பரத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் அவற்றை அப்புறப்படுத்த நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருவமழை மற்றும் புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பெரும்பாலான சாலைகள், குடியிருப்பு பகுதிகள், தாழ்வான பகுதிகள் மற்றும் மருத்துவமனை பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
அந்த வகையில், தாம்பரத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில் மழை நீரானது முழங்கால் அளவிற்குத் தேங்கியுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், நீர் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசுத்தொல்லை அதிகரித்துத் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.