தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவரை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் - போலீசார் சமரசம் பேசி புகாரை வாபஸ் பெற வைத்ததாக குற்றச்சாட்டு! - தகராறில் ஈடுபட்ட அரசுப்பேருந்து ஓட்டுநர் நடத்துனர்

கார் மீது அரசுப் பேருந்து உரசியதால் ஏற்பட்ட தகராறில், மருத்துவரை தாக்கி அவமதித்த சம்பவத்தில், போலீசார் அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்காமல் தன்னிடம் சமரசம் பேசி புகாரை வாபஸ் பெற வைத்ததாக பாதிக்கப்பட்ட மருத்துவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Government
சென்னை

By

Published : Apr 15, 2023, 4:11 PM IST

மருத்துவரை தாக்கிய அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துனர்

சென்னை: கோடம்பாக்கம் யூனிடெட் காலனியை சேர்ந்தவர் மருத்துவர் சிவானந்தகுமார் (42). இவர் ஓஎன்ஜிசியில் நான்கு வருடங்கள் ஒப்பந்த மருத்துவராக பணிபுரிந்து, பின்னர் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார்.

கடந்த 11ஆம் தேதி, சிவானந்தகுமார் தனது காரில் மனைவி மற்றும் மகளுடன் ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார். பவர் ஹவுஸ் அருகே சென்றபோது, பாரிமுனையில் இருந்து கே.கே. நகர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து (17D) காரின் இடதுபுற பின்பக்க டயர் மற்றும் காரின் பக்கவாட்டில் லேசாக உரசியதாக தெரிகிறது.

அப்போது சிவானந்தகுமார், ஒழுங்காக பேருந்தை ஓட்டிச் செல்லுங்கள் என்று பேருந்து ஓட்டுநரிடம் கூறிவிட்டு கடந்து சென்றுள்ளார். இதனையடுத்து அவரை விடாமல் பின் தொடர்ந்து மாநகரப் பேருந்தை ஒட்டி வந்த ஓட்டுநர், காருக்கு அருகே பேருந்தை நிறுத்தி, மருத்துவரை கீழே இறங்கி வரச் சொல்லி, ஓட்டுநர் - நடத்துநர் இருவரும் தகராறு செய்ததாக தெரிகிறது. ஓட்டுநரும், நடத்துநரும் சிவானந்தகுமார் முகத்தில் எச்சில் துப்பி, தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை சிவானந்தகுமாரின் மனைவி செல்போனில் படம் பிடித்தபோது, அதனையும் பறிக்க முயற்சி செய்து, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இருவரும் மருத்துவரை கீழே தள்ளிவிட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து தன்னை தாக்கிய ஓட்டுநர் சதிஷ்குமார், நடத்துநர் கோபி உள்ளிட்ட மூன்று பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் சிவானந்தகுமார் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தான் அளித்த புகாரின் அடிப்படையில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், புகாரை வாபஸ் பெறும்படி போலீசார் சமரசம் செய்ததாக சிவானந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

புகாரை வாபஸ் பெறவில்லையென்றால், ஓட்டுநர்-நடத்துநர் அளித்த புகாரின் பேரில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மிரட்டியதாகவும், இதனால் வேறு வழியின்றி புகாரை வாபஸ் பெற்றதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். சிவானந்தகுமாரை அரசுப் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: இரவில் பிரியாணி சாப்பிட காரில் சென்றபோது நேர்ந்த சோகம்: 3 இளைஞர்கள் பலி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details