சென்னை: கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகை வாசல் முன்பு கடந்த 25 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசுவதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல ரவுடியான இந்த கருக்கா வினோத், பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம், தேனாம்பேட்டை காவல் நிலையம், மதுபான கடை என மூன்று முறைக்கு மேல் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவத்தில் சிறை சென்றுள்ளார். இந்த நிலையில், தற்போது இவர் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், இவரால் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, ரவுடி கருக்கா வினோத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், நீதிமன்றத்தில் பாஜக அலுவலகத்திற்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது வெளியே வந்த கருக்கா வினோத், மீண்டும் ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.