சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த திண்டுக்கல்லைச் சேர்ந்த அருண் பிரசாத் (24) என்பவரை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அவரது உடைமைக்குள் காற்று அடிக்கும் கருவி ஒன்றை வைத்திருந்தார். அதைப் பிரித்து பார்த்தபோது ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 398 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே போல், இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த சுனிதா ஜெயலதா (39) என்பவரிடமிருந்து ரூ. 22 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 506 கிராம் தங்கத்தையும்; கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த சர்பு நிஷா (40) என்பவரிடமிருந்து ரூ. 10 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 239 கிராம் தங்கத்தையும் சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர்.