சென்னை:துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் சிறப்பு விமானம், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு பயணி, எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் ஒன்று துபாயிலிருந்து வாங்கி வந்திருந்தார்.
அதனைப் பார்த்த அலுவலர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக அந்த எலக்ட்ரிக் ரைஸ் குக்கரை திறந்துப் பார்த்தபோது, அதனுள் 300 கிராம் எடையுள்ள வட்டவடிவமான தங்கக் கட்டி மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 13 லட்சத்து 70ஆயிரம் ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது. இதையடுத்து, தங்கத்தைப் பறிமுதல்செய்த அலுவலர்கள், அப்பயணியைக் கைதுசெய்தனர்.
இந்நிலையில் சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி, உள்ளாடைக்குள் 13 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான 290 கிராம் தங்கப் பசையை மறைத்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.