சென்னை:மலேசியா மற்றும் குவைத் நாடுகளில் இருந்து சென்னைக்கு எல்.இ.டி எமர்ஜென்சி லைட்டுகள் மற்றும் டிரில்லிங் மிஷினில் மறைத்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.4.55 கோடி மதிப்புடைய 8.42 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் இருந்து நேற்று (நவ.11) ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வரும் பயணி நூதன முறையில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் அதிகாரிகள் பயணிகளிடம் தீவிரமாகச் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில், சென்னையைச் சேர்ந்த 32 வயதுடைய பயணி ஒருவர் ரூ.2.67 கோடி மதிப்புள்ள 4.9 கிலோ தங்கத்தை, 3 எல்.இ.டி எமர்ஜென்சி லைட்டுகளில், தங்கக் கட்டிகள், தகடுகள், சிறிய துண்டுகள் வடிவில் மறைத்துக் கடத்தி எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் இருந்து தங்கத்தைப் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த மலேசிய நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் பயணியின் உடைமைகளைச் சுங்கத் துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.