சென்னை:சார்ஜாவில் இருந்து ஃகல்ப் ஏர்வேஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனா்.
அப்போது சூடான் நாட்டைச் சேர்ந்த ஒரு பயணி சுற்றுலா விசாவில் சூடானில் இருந்து சார்ஜா வழியாக சென்னைக்கு வந்தாா். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எனவே சூடான் பயணியை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனையடுத்து அவருடைய உடமைகளை முழுமையாக சோதனை செய்தனா். ஆனால் அதில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனையிட்டனா்.
அப்போது அவருடைய உள்ளாடை மற்றும் ஆசன வாய்க்குள் மறைத்து வைத்திருந்த பார்சல்களை கண்டுபிடித்தனர். அந்த பார்சல்கள் பிரித்து பார்த்த போது, அதனுள் தங்கப்பசை இருந்தது. மொத்தம் 1.85 கிலோ தங்கப்பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 82.5 லட்சம்.