சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் சிறப்பு விருந்தினராக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றர்.
துவக்க விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் பெருமளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதோடு, அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்ற வகையில், 200க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை, தமிழ்நாடு தரவு மையக் கொள்கை, தமிழ்நாடு உயர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை, தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை, தமிழ்நாடு எத்தனால் கொள்கை, தமிழ்நாடு சரக்கு போக்குவரத்துக் கொள்கை, தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி என பல்வேறு கொள்கைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பரவலான, சீரான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது லட்சியம், அதனால்தான் தொழில் திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு வருகிறது. பல பின்தங்கிய மாவட்டங்களில் பெருமளவு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக முதலீட்டுத் திட்டங்கள் ஈர்க்கப்பட்டு உள்ளது.
இதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு, அந்த பகுதியில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதுடன், அந்த மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தொழில்புரியும் நிறுவனங்கள், அவர்களது தொழிலை மேலும் விரிவுபடுத்துவது தமிழ்நாட்டின் சிறப்பான தொழில் சூழலுக்கான அத்தாட்சி. மிகப்பெரும் தொழில் நிறுவனங்களான ஹுண்டாய், டாட்டா போன்ற நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்து உள்ளன.
முதலீடுகளை ஈர்க்கின்ற மாநிலங்களில், இந்திய அளவில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் மிகவும் திறமையானவர்கள். முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து சேவை ஆதரவுகளையும் தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. எல்லா துறைகளிலும் திறன்மிகு பணியாளர்களை இந்த மாநிலம் கொண்டுள்ளது. இந்த மாநாடு நடைபெறுகின்ற இரண்டு நாட்களிலும், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த மாநாட்டினால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயரும், தமிழ்நாட்டினால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும். என் தலைமையிலான தமிழக அரசு, உங்களுக்கு அனைத்து வகையான ஆதரவுகளையும் வழங்கும். சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என செயல்படுவது திராவிட அரசு. வாருங்கள், முதலீடு செய்யுங்கள். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திலும், இந்தியாவின் வளர்ச்சியிலும், உங்கள் பங்களிப்பை தாராளமாக வழங்குங்கள் என அன்போடு அழைக்கின்றேன்” எனத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற ஹுண்டாய் நிறுவனம், தமிழகத்தில் மேலும் ரூ.6 ஆயிரத்து 180 கோடி முதலீடு செய்துள்ளது. குவால்காம் நிறுவனம் ரூ.177.27 கோடி, ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனம் காஞ்சிபுரம் பகுதியில் அதன் உற்பத்தில் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. அதற்காக ஃபர்ஸ் சோலார் நிறுவனம் 5 ஆயிரத்து 600 கோடி முதலீடு செய்துள்ளது.
கோத்ரேஜ் நிறுவனம் செங்கல்பட்டு பகுதியில் அமைக்க உள்ள அதன் கன்ஸ்யூமர் புராடக்ட் தொழிற்சாலைக்கு ரூ.515 கோடி முதலீடு செய்துள்ளது. மேலும், இந்த தொழிற்சாலையில் பணி வாய்ப்பு பெறுவபவர்களில் 50 சதவீதம் பெண்கள் மற்றும் 5 சதவீதம் பேர் மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளாக இருப்பார்கள் என அந்நிறுவனத்தின் தலைவர் நிசாபா அறிவித்தார்.
கிருஷ்ணகிரியில் தொழிற்சாலை அமைக்க டாட்டா நிறுவனம் ரூ.12 ஆயிரத்து 82 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 40 ஆயிரத்து 500 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என கூறப்பட்டு உள்ளது. பெஹட்ரான் நிறுவனம், செங்கல்பட்டு பகுதியில் அமைக்க உள்ள தொழிற்சாலைக்காக ஆயிரம் கோடி முதலீடு செய்து உள்ளது. இதன் மூலம் 8 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதியில் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் முதலீடு செய்யும் ரூ.12 ஆயிரம் கோடி மூலம் 6 ஆயிரத்து 600 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனக் கூறப்பட்டு உள்ளது. டிவிஎஸ் நிறுவனம் முதலீடு செய்யும் ரூ.5 ஆயிரம் கோடி மூலம் 500 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனக் கூறப்பட்டு உள்ளது.
மிட்சுபிஷி நிறுவனம் கும்மிடிப்பூண்டி பகுதியில் அமைக்க உள்ள தொழிற்சாலைக்காக ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளது. தூத்துக்குடி பகுதியில் வின் ஃபாஸ்ட் நிறுவனம் 16 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது.
இதையும் படிங்க: முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதை முன்கூட்டியே கணிக்கிறது இன்றைய தமிழக அரசு - ஸ்டாலின் பெருமிதம்!