சென்னை: சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள புனித தோமையார் சமூக நலத்திட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மாந்தோப்பு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறுதொழில் நடைபாதை வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலமாக வணிகக் கடன்வழங்கும் நிகழ்ச்சியில் தலைமை தாங்கிய அவர், வங்கி கடன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மக்களுடன் முதல்வர் திட்டம் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் ஒன்றியம், பேரூராட்சி, மாநகரப் பகுதிகள், நகரப் பகுதிகள் என தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றது. பொதுமக்களின் கோரிக்கையினை கேட்டு அதனை ஒரு மாத காலத்திற்குள் திர்வுகாண்பதே இதன் நோக்கம் ஆகும்.
சென்னையை பொருத்தவரை ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜன.11) வரை 75 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் சுமார் 22.566 மனுக்கள் பெற்றப்பட்டுள்ளது. இப்புகார் மனுக்களில் பெருநகர சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல் வீட்டு வசதி வாரியம், நகராட்சி மேலாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு மனுக்களின் கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்பட உள்ளது.
அதுமட்டுமல்லாது அந்நிகழ்ச்சி நடைபெறும் முகாம்களில் பிறப்பு - இறப்பு சான்றிதழ்களுக்கு அங்கேயே தீர்வு காணப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்யில் உள்ள 200 வார்டுகளிலும் இம்முகாம்கள் நடத்தப்படும்.
சைதாப்பேட்டை பகுதிகளில் உள்ள சிறு வணிகர்கள், சாலையோரம் பூ வியாபாரம் செய்பவர்கள், காய்கறி விற்பவர்கள், பழம் வியாபாரம் செய்பவர்கள் என்று 1014 நபர்களுக்கு வங்கிகள் மூலம் சிறு வணிகக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் சார்பில் வழங்கப்பட்டிருக்கும் தொகையான ரூ.10,000த்தை 12 மாதங்களுக்கு செலுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அப்படி அவர்கள் 12 மாதங்களுக்குள் சரியாக செலுத்திவிட்டால் அடுத்து ரூ.20,000 தொகையினை கடனாக வழங்கப்படும் என்று அறிவுறுத்தியிருக்கின்றனர்.
அந்த ரூ.20,000ஆம் தொகையை 24 மாதங்களில் கட்டி முடித்தால், ரூ.50,000 வங்கிக்கடன் வழங்கப்படும். சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வணிகக் கடன் திட்டத்தை, சைதாப்பேட்டையில் 1014 நபர்களுக்கு இன்று (ஜன.12) தொடங்கி வைக்கப்பட்டது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மாப் குச்சியில் குளுக்கோஸ் பாட்டிலை பொறுத்தி நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது என்ற செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் டெங்கு காலத்தில் கொசுவலையினை பொறுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அந்த கட்டிலின் கம்பியில்தான் குளுக்கோஸ் பாட்டில் பொறுத்தப்பட்டு அந்த நோயாளிக்கு ஏற்றப்பட்டது என்பது விசாரணை மேற்கொண்டதில் தெரியவந்துள்ளது.
2 நாட்களுக்கு முன்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டதாகவும் செய்தி வெளிடப்பட்டது. இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வேண்டும் என்றே குளுக்கோஸ் பாட்டிலை பொறுத்தும் கம்பியில் இருந்து எடுத்து அந்த பெண்ணை பிடிக்க வைத்து வீடியோ பதிவு செய்யப்பட்டது என்பது கண்டறியப்பட்டது. கீழ்தரமாக வீடியோ பதிவு செய்து சமூக வளைதளத்தில் பதிவு செய்த அந்த நபரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு அவரை தேடி வருகிறோம்.
இப்படியான தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. எனவே செய்தி வெளியிடும் முன் அதன் உண்மை தன்மையினை அறிந்து செய்தி வெளியிட வேண்டும். முன்னதாக தென்காசியில் பக்கவாதம் ஏற்பட்ட நபருக்கு தூய்மை பணியார் ஒருவர் மருத்துவம் பார்த்தார் என்ற வகையில் தவறான செய்தி வெளியிடப்பட்டது. விசாரணை மேற்கொண்டதில், அந்த தூய்மை பணியாளர் அந்த நோயாளியை துடைக்கும் பணியினை மேற்கொண்டார் என்பது தெரியவந்தது" என கூறினார்.
இதையும் படிங்க:கோடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமியிடம் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்!