சென்னை:ஜெர்மன் கல்வி பரிவர்த்தனை சேவை (German Academic Exchange Service) அமைத்திருக்கும் இந்த மையம், மாறிவரும் காலநிலையைச் சமாளிப்பதற்கும், நிலையான வளர்ச்சிக்கு வலுவான அடிப்படையை வழங்கி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் புதுமையான தழுவல் உத்திகளை உருவாக்கும்.
நீர் பாதுகாப்பு, மாறிவரும் காலநிலைக்குத் தக்கபடி மாறுதல் ஆகியவற்றில் உள்ள உலகளாவிய சவால்களை சமாளிக்க ஜெர்மன் அரசு நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் நிறுவப்பட்ட ‘உலகளாவிய நீர், காலநிலைத் தழுவல் மையம்’ என்ற அமைப்பை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) சென்னை நடத்துகிறது.
ஐஐடி மெட்ராஸ், பாங்காக்கின் ஆசிய தொழில்நுட்பக் கழகத்தில் (ஏ.ஐ.டி) ஒரு செயற்கைக்கோள் மையத்துடன் இணைந்து, பிரதான மையத்தை நடத்துகிறது.
இது ஐ.ஐ.டி மெட்ராஸ், ஜெர்மன் கல்வி பரிவர்த்தனைச் சேவையின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், ஒரு மெய்நிகர் நிகழ்வில் ஜூன் 20 ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்த மையம் 'German Academic Exchange Service' (DAAD) ஆல் உருவாக்கப்பட்டு, டிரெஸ்டன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், RWTH ஆச்சென் பல்கலைக் கழகம் ஆகிய ஜெர்மன் நிறுவனங்களுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்திற்கு ‘ஏபிசிடி’ (ஆச்சென்-பாங்காக்-சென்னை-டிரெஸ்டன்) என்று பெயரிடப் பட்டுள்ளது. நான்கு முக்கிய நகரங்களின் புவியியல் ரீதியான அணுகலுடன், ஒரு பொதுவான கருப்பொருள் என்ற ஒற்றைக் குடையின் கீழ், முன்னணி ஜெர்மன், ஆசிய பல்கலைக்கழகங்களுக்கிடையில் இருக்கும் நெட்வொர்க்குகளின் மூலோபாய விரிவாக்கத்தைக் குறிப்பதாக விளங்குகிறது இம்மையம்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெர்மன் ஃபெடரல் குடியரசின் துணைத் தூதர் கரின் ஸ்டோல், “இந்த திட்டம் கோவிட்-19 தொற்றுநோயால் தாமதப்படுத்தப்படாததால் டிஜிட்டல்மயமாக்கல் நல்ல பலன் தருவதாக உள்ளது.
கோவிட்-19 பிரச்னை இன்னும் முடிவடையவில்லை. ஆனால் நாம் நம்பிக்கையுடன் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.
கல்வித் துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. சென்னையைப் பொறுத்தவரை ஐஐடி மெட்ராஸ் முக்கியத் திட்ட மையமாகவும், திட்டத்தின் தூண்களில் ஒன்றாகவும் இருப்பது குறித்து, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தோ-ஜெர்மன் கல்வி பரிமாற்றம் மிகவும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஐஐடி மெட்ராஸின் வைர விழா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
உலகளவில் மாணவர்களுக்கு பலனளிக்கும்
ஜெர்மன் நாடாளுமன்றத்தில் புதிய காலநிலை முன்முயற்சி மசோதாவை நான்கு நாட்களுக்கு முன்பு நிறைவேற்றியதன் மூலமும், இத்தகைய மையத்தைத் தொடங்குவதன் மூலமும் நாங்கள் சரியான திசையில் பயணம் செய்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இந்தப் புதிய கூட்டமைப்பு உலகளவில் பல நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் பயிலும் மாணவர்களுக்கும் பலனளிக்கும்” என்றார்.
உலகளாவிய நீர், காலநிலை தழுவல் மையம், உயர் கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் அறிவு பரிமாற்றத்தில், மேலும் கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவித்து ஒருங்கிணைத்து விரிவாக்கும் ஒரு செயல்பாட்டு தளமாக செயல்படுவதை நோக்கமாகக் கொண்டது. ஐஐடி மெட்ராஸின் பெருங்கடல் பொறியியல் துறை பேராசிரியர் எஸ்.ஏ.சன்னசிராஜ் இந்த மையத்திற்குத் தலைமை தாங்குகிறார்.
நிகழ்ச்சியில் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி, இந்தியா, ஜெர்மனி, தாய்லாந்து ஆகியவற்றின் மதிப்பு மிக்க நிறுவனங்களின் இடையேயான சிறந்த ஒத்துழைப்புத் திட்டங்களைப் பாராட்டினார். TUD ஜெர்மனியுடனான தனது ஆரம்பகால உறவுகளையும், இப்போது RWTH, ஜெர்மனியுடனான வலுவான ஒத்துழைப்பையும் கொண்டுள்ளது.
புதிய வாய்ப்புகளை கொண்டு வரும்
ஐஜிசிஎஸ்., DAAD போன்ற நிறுவனங்களின் முதுநிலை, முனைவர் மாணவர்களுக்கான பரிமாற்றத் திட்டங்களுடன் இந்தப் புதிய முயற்சி, நீர்ப் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் துறையில் மாணவர்களுக்குப் புதிய வாய்ப்பைக் கொண்டு வரும்.
தொடக்க நிகழ்ச்சியில் பேசிய DAAD யின் தில்லி பிராந்திய அலுவலக இயக்குநரும், DWIH, தில்லியின் இயக்குநருமான டாக்டர் கட்ஜாலாஷ், "ஜெர்மனி இப்போது ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. வரும் 2045க்குள் நாட்டை காலநிலை மாற்றத்துக்குத் தக்கபடி மாற்றிக்கொள்வதைக் கட்டாயமாக்கியுள்ளது.
காலநிலை மாற்றம் ஒரு தேசிய பிரச்னை அல்ல, உலகளாவிய பிரச்னை. இந்தத் திட்டம் ஒரு விரிவான திட்டமாதலால் DAAD இதை ஊக்குவிக்க விரும்புகிறது.
மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி இந்தோ-ஜெர்மன் ஒத்துழைப்பு தொடர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, நீர்ப் பாதுகாப்பு, காலநிலை குறித்து ஒரு புதிய முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்கப்பட்டிருப்பதும், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களிடையில், ஒரு புதிய ஒத்துழைப்புக்கான திட்டம் தொடங்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.
அறிவுப் பரிமாற்றத்துக்கும், நீர் நெருக்கடியைச் சமாளிக்க உதவும் யோசனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் இது வழிவகுக்கும். மாற்றத்தை ஏற்படுத்துதல், பரிமாற்ற முனைவர் மாணவர்கள், நிபுணர்களை அறிவை மாற்றுவதற்கும், நீர் நெருக்கடியைச் சமாளிக்க யோசனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் இது உதவும். ஒரு புதுமையான, கூட்டு உலகளாவிய அறிவியல் முதுகலைப் பட்டப்படிபான எம்.எஸ்.சி. ‘நீர் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய மாற்றம்’ குறித்த பாடநெறி கட்டமைக்கப்படுகிறது.
கூடுதலாக, உலகளாவிய கூட்டாளர் நிறுவனங்களின் கீழ் நீர் பாதுகாப்பு குறித்த புதிய அறிவைக் கொண்டுவருவதற்காக இடை-ஒழுங்குப் பணிகளை ஊக்குவிப்பதற்கான கூட்டு முனைவர் ஆராய்ச்சி திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: நினைவுகள்’ குறித்த ஆய்வுகளுக்கென ஆசியாவின் முதல் நெட்வொர்க்: தொடங்கி வைத்த சென்னை ஐஐடி!