சென்னை:ஆவடி கௌரிபேட்டையைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(42). இவர் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை தளவாட தொழிற்சாலையான டேங்க் பேக்டரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் நேகரிகா ஸ்ரீ (9). 4ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள இவர், நேற்று (ஜூன் 3) மாலை பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து கடைக்குச் சென்றுள்ளார்.
பின்னர், பால் வாங்கிவிட்டு மீதி சில்லரை காசை கையில் வைத்து விளையாடிக் கொண்டு இருந்த நேகரிகா ஸ்ரீ, 5 ரூபாய் நாணயத்தை எதிர்பாராத விதமாக வாய்க்குள் போட்டு விழுங்கி உள்ளார். ஆனால், இது குறித்து பெற்றோரிடத்தில் சொன்னால் திட்டுவார்களோ என பயந்து உடனடியாக தண்ணீரை குடித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதுடன் உடல் வியர்த்து வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அழுது கொண்டே நேகரிகா ஸ்ரீ நடந்ததை பெற்றோரிடத்தில் கூறி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக அருகில் உள்ள 24 மணி நேர தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, 5 ரூபாய் நாணயம் உள்ளே இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். அதேநேரம், அங்கு இருந்த மருத்துவர்கள் பெற்றோரிடத்தில் எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு சிறுமியை உடனடியாக அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், சிறுமி வலியால் மிகவும் துடித்ததால் ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர், இது போன்ற பிரச்னைக்கு சிகிச்சை செய்ய முடியாது எனவும், உங்கள் மகள் நன்றாகத்தான் உள்ளார் எனவும், எனவே உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்வது நல்லது எனவும் கூறியுள்ளார்.
இதை கேட்ட பெற்றோர் பெண் மருத்துவரிடம் ஆம்புலன்ஸ் மூலமாக சிறுமியை அழைத்துச் செல்ல உதவி கேட்டுள்ளனர். ஆனால், அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்ல முடியாது என்றும், நீங்கள் தனியார் வாகனம் மூலம்தான் செல்ல வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், அனைவரையும் மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லுமாறு அப்பெண் மருத்துவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.