தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதி உள்ளது' - உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதி இருப்பதாகக் கூறி, நியமனத்துக்கு விதித்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

girija vaithyanathan
உயர் நீதிமன்றம்

By

Published : Apr 17, 2021, 2:48 PM IST

தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின்படி, ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் விவகாரங்களைக் கையாண்ட அனுபவமில்லாத கிரிஜா வைத்தியநாதனை, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமித்துள்ளதாகக் கூறி, அவரது நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், "தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலராகவும், நில நிர்வாகத் துறைச் செயலராகவும், தலைமைச் செயலராகவும், கிரிஜா வைத்தியநாதன் சுற்றுச்சூழல் விவகாரங்களைக் கவனித்துள்ளதாகக் கூறி அது சம்பந்தமான ஆவணங்களைத் தாக்கல்செய்தார்.

மேலும், நெகிழிக் தடை உத்தரவை அமல்படுத்துவதற்கான குழுவின் தலைவராகவும், கூவம் ஆறு தூய்மைப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான குழுவில் தலைவராகவும் கிரிஜா வைத்தியநாதன் செயல்பட்டுள்ளதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதன்மூலம் அவர் பசுமைத் தீர்ப்பாய சட்டத்தின்படி தேவைப்படக்கூடிய ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சுற்றுச்சூழல் துறை சார்ந்த அனுபவங்களைப் பெற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்க கிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதியிருப்பதாகக் கூறி, அவரது நியமனத்துக்கு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:'அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் மக்களை சிரிக்க வைத்தவர்’ - விவேக் இறப்புக்கு மோடி இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details