தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன டிடிவியின் ‘பரிசுப் பெட்டி’! - டிடிவி தினகரன்

டெல்லி: டிடிவி தினகரனின் அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கிய சில நிமிடங்களிலேயே, ட்விட்டரில் #GiftBox, #பரிசுப்பெட்டி ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

பரிசுப்பெட்டி

By

Published : Mar 29, 2019, 11:04 AM IST

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்தத் தேர்தலில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமின்றி, திமுகவை டெபாசிட் இழக்கச் செய்தார் டிடிவி தினகரன்.

இதன்மூலம் தனக்கென இருக்கும் அரசியல் செல்வாக்கை நிரூபித்த தினகரன், தற்போது நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் அமமுக என்கிற பதிவு செய்யப்பட்டாத கட்சியின் மூலமும் அதன் கூட்டணி கட்சியின் மூலமும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்குகிறார்.

இதற்கிடையே, அவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற குக்கர் சின்னத்தை தனது அமைப்புக்கு நிரந்தர சின்னமாக ஒதுக்கிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிடிவி தினகரனின் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரு குழுவாகக் கருதி அவர்களுக்கு ஒரு பொது சின்னத்தை ஒதுக்கிட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் அடிப்படையில், அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 36 சின்னங்களை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. அதிலிருந்து ‘பரிசுப் பெட்டி’ சின்னத்தை அமமுக தேர்வு செய்ததாக டிடிவி தினகரனின் வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியைச் சேர்ந்த வெற்றிவேல், பரிசுப் பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கு ஒருநாள்போதும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடமிருந்து பரிசுப்பெட்டி சின்னத்தை அமமுக பெற்ற சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது. மேலும் ட்விட்டரில் #GiftBox, #பரிசுப்பெட்டி ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details