சென்னை:தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7ஆயிரத்து 299 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு முதல்கட்டமாக இன்று முதல் (ஜூன் 1) வரும் 10ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களுக்கு இரண்டாம் கட்டமாக 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் கலந்தாய்வும் நடத்தப்பட்டு, ஜூன் 22ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 164-ல் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 8ஆம் தேதி காலை முதல் 22ஆம் தேதி வரையில் பெறப்பட்டன. அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 மாணவர்கள் பதிவு கட்டணம் செலுத்தினர். 1 லட்சத்து 15 ஆயிரத்து 274 மாணவர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகளும், 78 திருநங்கைகளும் விண்ணப்பம் செய்திருந்தனர்.
மேலும், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 54 ஆயிரத்து 638 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கல்லூரிகளுக்கு 25ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு இன்று நடத்தப்பட்டு வருகிறது.
ஜூன் 12 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு:சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி முதல் துவங்கும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.