சென்னை: பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் நேற்று (பிப்.21) விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க திட்டமிடுள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம், மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் அண்ணாமலை அக்கட்சிக்கு தலைவராக இருக்க தகுதி இல்லாதவர் என்பன உள்ளிட்ட பல விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குறித்து பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக நடிகை காய்த்ரி ரகுராம் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று(பிப்.22) விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, நடிகை காயத்ரி ரகுராம் நேரில் சென்று சந்தித்தார்.
காயத்ரி ரகுராம் - திருமாவளவன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. இதுகுறித்து பதில் அளித்த திருமாவளவன், "எனக்கும் காயத்ரி ரகுராமிற்கும் கருத்து மோதல்கள் இருந்தாலும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு" எனக் கூறினார். இந்த சந்திப்பு குறித்து பேசிய நடிகை காயத்ரி ரகுராம், "நான் விசிகவில் இணைய உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.
நான் திருமாவளவனை மரியாதை நிமித்தமாகவே சந்திதேன். நான் பாஜகவில் இருந்த போது அவரை கடுமையாக விமர்சனம் செய்தேன். ஆனால், அதையெல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல், பாஜகவில் இருந்து நான் விலகியபோது ஆறுதல் கூறினார்" எனக் கூறினார்.