சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அவர் அந்த பொறுப்பிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கை கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் காயத்ரி தொடர்ச்சியாகச் செயல்பட்டதால் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். இதனையடுத்து அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி, அவரது யூடியூப் சேனல்கள் தன்னைப் பற்றி தவறாகப் பேசி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி தினந்தோறும் அவரது யூடியூப் சேனல்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருகிறார்கள். வதந்திகளைக் கண்டு நான் பயப்படுவேன் என்று நீங்கள் நினைத்தால், என்னை மன்னிக்கவும். நான் பயப்படவில்லை.
அண்ணாமலை குறித்து காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு அதேபோல், நீங்கள் என்னைப் பற்றிப் பரப்பும் வதந்திகளை என் தாயும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பெண்களின் தாயும் உங்களைச் சபிக்க விரும்பாவிட்டாலும், அறியாமல் வரும் சாபம் ஆபத்தானது என்று சிந்தியுங்கள். உங்கள் தவறுகளுக்காக நீங்கள் வருந்துவீர்கள். நீங்கள் கர்மாவை எதிர்கொள்வீர்கள்.உங்கள் தனிப்பட்ட மனித தாக்குதல் எனது கேள்விகளிலிருந்தும் மற்றும் எனது சவாலிலிருந்தும் திசை திருப்புவதற்காக மட்டுமே என்பதை நான் புரிந்துகொள்கிறேன்” எனகூறியிருந்தார்.
இந்த நிலையில் தன்னை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிடும் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அண்ணாமலை வார்ரூம் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு மார்பிங் திறன்களைப் பயிற்றுவிப்பதுபோல் தெரிகிறது. பாஜகவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும், நம் இந்தியாவிற்கும், அண்ணாமலையின் தலைமை பெண்களுக்கு ஆபத்தானது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் பலத்தை நிரூபிக்க அவசியமில்லை: அண்ணாமலை