சென்னை: ஆந்திரப் பிரதேசத்திலிருந்து சென்னைக்கு அதிகளவிலான கஞ்சா கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நல்லூர் டோல் பிளாசாவில் தீவிரமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திரப்பிரதேச பதிவெண் கொண்ட பொலிரோ வாகனம் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் அவ்வழியாக வந்தது. வாகனத்தை மறித்த அதிகாரிகள் அந்த வாகனத்தில் தீவிர சோதனை மேற்கொண்ட போது, கஞ்சா ஏதும் சிக்கவில்லை. பின்னர் மீண்டும் வாகனத்தின் மேல் பகுதியில் உள்ள இன்டீரியரின் ஸ்கூருவை கழற்றி சோதனையிட்டபோது, ரகசிய அறைகளில் கஞ்சா பொட்டலங்களாக இருந்துள்ளது.
இதேபோல காரின் டேஷ்போர்டிலும் ரகசிய அறைகளில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் வாகனத்தில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட மொத்தம் 160 கிலோ கஞ்சாவை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றைக் கடத்தி வந்த இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்திற்கு கஞ்சா கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.