தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கங்கை கொண்ட சோழபுரம் அருகே நான்கு வழிச்சாலை: 3 வாரங்களில் பரிசீலிக்க உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: புராதன சின்னமான கங்கை கொண்ட சோழபுரம் கோயில் அருகே நான்கு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை மூன்று வாரங்களில் பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai HC

By

Published : Aug 7, 2019, 1:00 PM IST

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் அருகில் திருச்சி - சிதம்பரம் இடையே தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி கங்கை கொண்ட சோழபுரம் வளர்ச்சிக் குழும அறக்கட்டளை தலைவர் கோமகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்திய தொல்லியல் துறையாலும் யுனெஸ்கோவாலும் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயிலிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுவதால் கனரக வாகனங்கள் போக்குவரத்து காரணமாக கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், இந்தச் சாலையை அமைக்க தொல்லியல் துறையிடம் தடையில்லாச் சான்று பெறப்பட்டதாகத் தெரியவில்லை எனவும், இந்தத் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீட்டர் தூரத்துக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளவே தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், சாலை அமைக்கத் தடை செய்யும் வகையில் எந்தச் சட்டவிதிகளும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தங்கள் மனுவை பரிசீலிக்காமல், சாலை அமைக்கும் பணிகள் தொடர்வதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை மனுவை சிறப்பு வட்டாட்சியர் மூன்று வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details