சென்னையில் கூட்ட நெரிசல், பார்க்கிங், திருவிழாக்கள் போன்ற பகுதிகளில் நிற்கக்கூடிய வாகனங்களை திருடும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த, நிலையில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு வரக்கூடிய ரசிகர்களின் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைத் தொடர்ச்சியாக திருடிய கும்பல் ஒன்று காவல் துறையினரிடம் சிக்கியுள்ளது.
சென்னை மாதவரத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவர் கடந்த 12ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டியைக் காண சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, தனது புல்லட் இருசக்கர வாகனத்தை அஸ்வின் வாலாஜா சாலையில் பார்க்கிங் செய்துவிட்டு போட்டியைக் காணச் சென்றுள்ளார்.
பின்னர், போட்டி முடிந்தவுடன் நிறுத்தி வைத்திருந்த புல்லட் இருசக்கர வாகனத்தை எடுக்கச்சென்றபோது புல்லட் காணாமல் போனதால், உடனடியாக அஸ்வின் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு வரும் ரசிகர்களின் புல்லட் இருசக்கர வாகனத்தை குறிவைத்து மட்டுமே ஒரு கும்பல் திருடிச்செல்வது தெரியவந்தது. இதனால், சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றிய பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று (ஏப்.30) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் இடையேயான போட்டி நடைபெற்றபோது வாலாஜா சாலையில் நிறுத்தி வைத்திருந்த ரசிகரின் புல்லட் பைக்கை இரண்டு நபர்கள் சைடு லாக்கை உடைத்து திருட முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் பைக்கை திருடிய இரண்டு பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் ராஜன் (55) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மணி என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் தங்களது சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்து அறை எடுத்து, கிடைத்த வேலையை செய்து வந்ததும், சரியான வேலை கிடைக்காததால் சென்னையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடும் தொழிலில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கோயில் திருவிழாக்கள், ரயில்வே மற்றும் பேருந்து பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை கண் இமைக்கும் நேரத்தில் சைட் லாக்கை உடைத்து திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். திருடிய இருசக்கர வாகனங்களை பார்க்கிங்கில் மறைத்து வைத்து அதிகப்படியான வாகனங்களைத் திருடியவுடன் மொத்த வாகனத்தையும் சொந்த ஊருக்குக் கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளனர்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 10 புல்லட் இருசக்கர வாகனங்களை பார்க்கிங்கில் இருந்து காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். வேறு எந்த பகுதிகளில் எல்லாம் இவர்கள் புல்லட் திருடி உள்ளனர், எந்த பகுதியில் எல்லாம் திருட்டு வழக்கு உள்ளது என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:மண்ட மேல இருக்க கொண்டையை மறந்திட்டீங்க மேடம்.. லேப்டாப் திருடி மாட்டிக்கொண்ட பெண் வீடியோ!