சென்னை:கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் காவல் துறை அனுமதி வழங்கியதன் பெயரில், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னையில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று (செப்.24) ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க தமிழ்நாடு காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது.
மேலும், விநாயகர் சிலைகளின் விஜர்சனம் விழாவின்போது எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வகையில், அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி, சென்னையில் சுமார் 22 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல் துறையின் வழிகாட்டுதலின்படி, அனுமதி அளிக்கப்பட்ட நான்கு கடற்கரைகளான சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை, காசிமேடு துறைமுக கடற்கரை, நீலாங்கரை கடற்கரை, திருவொற்றியூர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் இன்று காலை முதல் (செப்.24) பொதுமக்கள் விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை படகில் கொண்டு சென்றும், மிகப்பெரிய சிலைகளை கன்வேயர் பெல்ட் மூலமும், கிரேன் வாகனங்கள் மூலமும் தூக்கிச் சென்று கடலில் கரைத்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் எந்த குழப்பமும் ஏற்படாத வகையில், கூடுதலாக 15 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல் திருவொற்றியூர், காசிமேடு, நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.