தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை ஆவணங்களை முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்புக்கு வழங்க உத்தரவு! - court news

மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில், முந்தைய ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்புக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆவணங்களை முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்புக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது!
டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆவணங்களை முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்புக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது!

By

Published : Jun 21, 2022, 7:32 PM IST

சென்னை:முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்தப் புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, புகாரில் அடிப்படை முகாந்திரம் இல்லை என அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில் வழக்கை முடிக்கக்கோரி தமிழ்நாடு அரசும் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து டெண்டர் முறைகேடு தொடர்பாக வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் 10 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், புகாரில் முகாந்திரமில்லை என்ற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வழங்க மறுத்ததை எதிர்த்து வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆவணங்களை வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த பின்னணியில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசின் அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். புகாரில் முகாந்திரமில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை நகலை முன்னாள் அமைச்சருக்கு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் வசம் உள்ள அறிக்கையை வழங்கக்கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக வேலுமணி தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, வழக்கு ஆவணங்களைப் பெற வேலுமணி தரப்புக்கு உரிமை உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை வேலுமணி தரப்புக்கு வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:70 வயது மருத்துவரிடம் ரூ.1.80 கோடி மோசடி - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ABOUT THE AUTHOR

...view details