தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை... 31 ஆண்டுகள் நடந்தது என்ன? - விரிவான தகவல் - supreme court

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 31 வருடங்கள் சிறையில் இருந்த பேரறிவாளனை அரசியலமைப்பு சட்டத்தின் 142ஆவது பிரிவின்படி உச்ச நீதிமன்றமே விடுதலை செய்துள்ளது.

perarivalan
perarivalan

By

Published : May 18, 2022, 6:15 PM IST

வழக்கின் பின்புலத்தை விரிவாக பார்க்கலாம்...

1991 மே 21: தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாட்டிற்கு வந்திருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அவருடன் 14 பேர் உயிரிழந்தனர்.

1991 ஜூன் 11:ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்.

1991 ஜூன் 14:இந்த வழக்கில் நளினி, அவரது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகன் கைது செய்யப்பட்டனர்.

1991 ஜூலை 22:மற்றொரு நபராக சுதேந்திரராஜா என்ற சாந்தனு கைது செய்யப்பட்டார்.

1998 ஜனவரி 28: வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கியது.

1999 மே 11: சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்டும் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. 19 பேர் தண்டனை காலத்தை நிறைவு செய்ததாக கூறி விடுவிக்கப்பட்டனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

1999 அக்டோபர் 8: தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென்று நான்கு பேரும் அனுப்பிய மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

1999 அக்டோபர் 10:தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் ஆளுநருக்கு கருணை மனுக்கள் அனுப்பினர்.

1999 அக்டோபர் 29:அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, கருணை மனுக்களை நிராகரிப்பு செய்ததால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

1999 நவம்பர் 25: தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவின் படியே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியது.

2000 ஏப்ரல் 19: நால்வரின் தூக்கு தண்டனை குறித்து அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில், நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

2000 ஏப்ரல் 24:தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

2000 ஏப்ரல் 26:நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனுக்கள் அனுப்பினர்.

2006 செப்டம்பர் 14:பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 472 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரனுக்கு விடுதலை கிடைக்காத நிலையில் நளினி நீதிமன்றம் சென்றார்.

2000– 2007:மேற்கண்ட காலகட்டங்களில் குடியரசுத் தலைவர்களாக பொறுப்பு வகித்த கே.ஆர்.நாரயணன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோரிடம் தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் நிலுவையில் இருந்தன.

2008 செப்டம்பர் 24: நளினியின் விடுதலை மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டிலும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2008 மார்ச் 19: ராஜிவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, நளினியை வேலூர் மத்திய சிறையில் சந்தித்து பேசினார்.

2011 ஆகஸ்ட் 12:தூக்கு தண்டனை கைதிகளான முருகன், சாந்தனு, பேரறிவாளன் கருணை மனுக்களை நிராகரிப்பு செய்வதாக குடியரசுத் தலைவர் அறிவித்தார். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் மூவரும் தூக்கிலிடப்படுவார்கள் எனத் தகவல்கள் பரவின.

இதனிடையே 11 ஆண்டுகளாக தங்களுடைய கருணை மனுக்கள் நிலுவையில் இருந்ததால், தாங்கள் தினமும் துன்பத்தை அனுபவித்ததாகவும், இதனால் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூவரும் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர். வழக்கில் மூன்று பேரையும் தூக்கிலிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர், வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

2014 பிப்ரவரி 18:உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பல ஆண்டுகள் எந்த காரணமுமின்றி மூன்று பேரின் கருணை மனுவும் நிலுவையில் இருந்ததால் அவர்களது மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

2014 பிப்ரவரி 19:தமிழ்நாடு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். மூன்று நாள்களில் சிறையில் உள்ள 7 பேரும் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.

தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தடையாணை பெற்றது. தங்களின் ஒப்புதல் இல்லாமல் சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் விடுவிக்க முடியாது என மத்திய அரசு வாதிட்டது.

2015 டிசம்பர் 2:சி.பி.ஐ. விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அதே சமயம், ஆளுநருக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் பிரிவு 161இன் படி விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

2016 பிப்ரவரி 24:தந்தை மரணம் காரணமாக முதன் முறையாக நளினி பரோலில் விடுவிக்கப்பட்டார்.

2016 மார்ச் 2 :7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியது. இதனிடையே மாநில அரசின் பரிந்துரையின் மீது ஆளுநர் உரிய முடிவு எடுக்காததால் தம்மை இந்த வழக்கில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.

2017 ஆகஸ்ட் 24:சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு முதன் முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு பரோல் வழங்கியது.

2018 செப்டம்பர் 6 : 7 பேர் விடுதலை தொடர்பாக 161ஆவது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்தது.

2019 ஜூலை 1 : தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

2020 ஜனவரி 14: ராஜிவ் காந்தி கொலை வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது தொடர்பாக உச்சநீதிமன்றம் முதன் முறையாக அதிருப்தி தெரிவித்தது.

2020 நவம்பர் 23: பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

2022 பிப்ரவரி 11:சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக பரோலில் வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டது.

2022 மார்ச் 9: 32 ஆண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2022 ஏப்ரல் 27 :பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற குழப்பம் நீடிப்பதால் அவரை ஏன் நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அமைச்சரவையின் பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப மாநில ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

2022 மே 4: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மே 10ஆம் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்தது.

2022 மே 11: ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையை அழிக்கும் வகையில் உள்ளது எனவும் தனக்கான கடமையை செய்யத் தவறியதோடு தேவையில்லாமல் குடியரசுத் தலைவரை ஆளுநர் இழுத்துவிட்டிருக்கிறார் எனவும் தமிழ்நாடு அரசு கடுமையாக வாதிட்ட நிலையில், வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

2022 மே 13 : பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

2022 மே 18: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், நீதிமன்றத்திற்கான சிறப்பு அதிகாரம் 142ஐ பயன்படுத்தி அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு முன்வைத்த முக்கிய வாதங்கள் :இந்த வழக்கில் தண்டனை கைதி ஆயுள் தண்டனை பெற்று இருக்கிறார். சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசுத் தலைவருக்கு கிடையாது. அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறுகிறது. அதுவே குழப்பங்களுக்கு காரணம். ஆளுநர் தனது கடமையை முறையாக செய்யவில்லை என குற்றஞ்சாட்டியது.

இதையும் படிங்க:ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மற்றவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details