சென்னை மாநகராட்சியில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் உள்ளன. கரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து, அனைத்து அம்மா உணவகங்களிலும் ஏழை, எளிய மக்கள் இலவசமாக உணவருந்தி வந்தனர்.
ஆனால் இன்று காலை முதல் அம்மா உணவகங்களில் மீண்டும் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர். ஏழை, எளிய மக்கள் ஏற்கனவே வருமானமற்று உணவின்றி தவித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு அவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காலை உணவு உண்ண வந்த மக்கள் கட்டண வசூலிப்பு என்றதும், மனமுடைந்து போனார்கள். தொடர்ந்து, ஊரடங்கு காலம் முடியும் வரை இலவசமாக உணவு வழங்க அரசு முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற சென்னை மாநகராட்சி, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் நிதி உதவிகள் தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு வருவதால் அந்நிதியை வைத்து, சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக மீண்டும் உணவு வழங்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு ஏழை எளிய மக்களுக்கு பெரும் ஆறுதலை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க :உணவு மறுக்கப்பட்ட அவலம்: சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு 22 கி.மீ. நடந்துவந்த தொழிலாளர்கள்!