தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசியில் ஜூஸ், பிரட் ஆம்லெட் கேட்டு அடாவடி.. 4 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் இலவசமாக பிரட் ஆம்லெட் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக மகளிர் காவல் ஆய்வாளர் உள்பட நான்கு பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 7, 2023, 2:55 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஜூஸ் கடை ஒன்றில் இலவசமாக பிரட் ஆம்லெட் கேட்டது தொடர்பான சிசிடிவி வீடியோ

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி என்பவர் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். மேலும், இந்த காவல் நிலையத்தில் ஜெயமாலா உள்ளிட்ட காவலர்களும் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, காவலர் ஜெயமாலா உள்ளிட்ட 4 காவலர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் வழக்கமான இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஜூஸ் கடைக்கு சென்று உள்ளனர். அந்த நேரத்தில், ஜூஸ் கடையில் இருந்த விற்பனையாளர்களிடம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களும் ஜூஸ், பிரட் ஆம்லெட், சாக்லேட் மற்றும் மினரல் வாட்டர் கேன் போன்றவற்றை இலவசமாகக் கேட்டுள்ளனர். இதற்கு கடையின் விற்பனையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், உணவுப் பொருட்களை இலவசமாக கேட்டதால் காவலர்களுக்கும், கடையின் விற்பனையாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. மேலும், கடை உரிமத்தையும் ரத்து செய்து விடுவதாக காவலர்கள் 4 பேரும் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

இதனால் பாதிப்புக்கு உள்ளான கடையின் உரிமையாளர், இது தொடர்பாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணை நடத்தி உள்ளார்.

இந்த விசாரணையில், ஜூஸ் கடையில் இரவுப் பணியில் ஈடுபட்ட 4 காவலர்களும் பொருட்கள் கேட்டு தகராறில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, காவலர் ஜெயமாலா உள்ளிட்ட நான்கு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

அதேநேரம், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்ததாகவும், இதனால் இந்த நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 காவலர்களும் ஜூஸ் கடையில் தகராறில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:கஞ்சா வியாபாரிக்கு உடந்தையான நெல்லை காவலர் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details