சென்னை: ''400 கோடி டிரான்ஸ்ஃபார்மர் ஊழலில் தவறுகளும், ஊழல்களும் எங்கள் ஆட்சியில் நடக்கவே நடக்காது என்று ஊழல்களைப் புறந்தள்ளுவதை விட முறைகேடுகளும், ஊழல்களும் வெளிச்சத்திற்கு வரும்பொழுது, அதன் மீது முறையான தன்னிச்சையான விசாரணையை வைத்து யார் ஊழல் செய்திருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதே ஒரு சாலச்சிறந்த நல்லாட்சிக்கான வழியாக அமையும்.
எனவே, அறப்போரின் புகார் மீது முறையான கிரிமினல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வது அவசியம். மேலும் கார்டல் சிண்டிகேட்களை உடைத்து உண்மையிலேயே போட்டியுள்ள வெளிப்படையான டெண்டர்களை இனி அரசு கோருவது மிக முக்கியமானது'' என அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
அறப்போர் இயக்கம், ஊழலை அழிப்பதற்காகத் தொடர்ந்து பல்வேறு புகார்களை அளித்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற ஊழல்கள் குறித்த புகார்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டது. அதன் அடிப்படையில் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின், அந்தப் புகார் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் அறப்போர் இயக்கம் அந்த ஆட்சியில் முறைகேடுகள் நடைபெறும் போது, அதனை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது. ஆனால், அரசின் சார்பில் அதில் உண்மை இல்லை என்பது போல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அறப்போர் இயக்கம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் குறித்து ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனுவை அனுப்பியது. அதற்கு தமிழ்நாடு அரசு நேற்று (ஜூலை 8) மறுப்புத் தெரிவித்து அறிக்கை அனுப்பியது.
இந்த நிலையில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ''தமிழ்நாடு மின்வாரிய ரூ. 400 கோடி டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் ஜூலை 6 அன்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பியது. இதற்கு பதில் அளித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட பத்திரிகை செய்தியைப் படித்தோம். அரசின் விளக்கத்திற்கு அறப்போரின் பதில்களில், கடந்த ஆட்சியிலும் கூட்டு சதி நடந்தது.
கடந்த 2 ஆண்டுகளில் அனைத்து ஒப்பந்தங்களிலும் அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலையைத் தருகிறார்கள். இதற்குப் பெயர் கூட்டு சதி (cartel syndicate formation) ஆகும். இது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் இதைப் பார்த்த உடனேயே டெண்டர் ஆய்வுக்குழு அதிகாரிகள் டெண்டரை ரத்து செய்து இருக்க வேண்டும் என்றும் நாங்கள் எழுப்பிய குற்றச்சாட்டிற்கு, கடந்த ஆட்சியிலும் இதுபோன்ற கூட்டு சதி நடந்துள்ளது என்று சொல்வது எப்படி பதிலாக அமையும்?
கடந்த ஆட்சியில் பல முறைகேடுகள் நடந்ததால் தானே உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். மேலும் குறிப்பிட்டுள்ள கடந்த ஆட்சி ஒப்பந்தத்தில் கூட பல ஒப்பந்தங்களில் அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலையை குறிப்பிடவில்லை. முக்கியமாக, பல ஒப்பந்தங்களில் குறைந்த விலை சொன்ன ஒப்பந்ததாரர் கூட்டுச்சதியில் இல்லாததை எங்களால் பார்க்க முடிகிறது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில நீங்கள் போட்ட அனைத்து டிஸ்ட்ரிபியூஷன் ட்ரான்ஸ்ஃபாமர்கள் ஒப்பந்தத்திலும் கிட்டத்தட்ட அனைத்து ஒப்பந்ததாரர்களுமே கூட்டுச் சதி செய்து, அனைவரும் ஒரே விலையை சொல்லி L1ஆக உள்ளதைப் பார்க்க முடிகிறது. அதாவது தங்கள் ஆட்சியில் Cartel மேலும் அதிகரித்ததை இது காண்பிக்கிறது. ஒரு தவறு, மற்றொரு தவறை சரி செய்யாது. கடந்த ஆட்சியின் முறைகேடுகள் உங்கள் ஆட்சியின் முறை கேட்டை சரி செய்யாது.
காப்பர் சுருளி:தமிழ்நாடு மின்வாரியம், காப்பர் சுருளியை பயன்படுத்தி உள்ளது. ஆனால் அறப்போர் அலுமினியம் சுருளியுடன் ஒப்பிட்டுள்ளது. இந்தப் பதிலும் தவறானது. அறப்போர் இயக்கம் 200 kva, 250 kva மற்றும் 500 kva ஒப்பந்தங்களுக்கு நேரடியாக ராஜஸ்தான் மாநிலம் பயன்படுத்திய காப்பர் சுருளியுடனேயே ஒப்பிட்டுள்ளது.
250 kva தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தம் நவம்பர் 2021ல் திறக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலும் நவம்பர் 2021ல் காப்பர் சுருளியுடன் மற்ற அனைத்து specification ஒன்றாக உள்ள கூடுதல் கெப்பாசிட்டியான 315 kva டெண்டர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய 250 KVA ஒப்பந்தத்தில் அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலையான ரூ. 7,51,660 குறிப்பிட்டு, அரசு அதை ரூபாய் 7.29 லட்சத்திற்கு குறைத்து வாங்கியுள்ளது. ஆனால், அதே மாதத்தில் காப்பர் சுருளியுடன் ராஜஸ்தான் கூடுதல் கெப்பாசிட்டியான 315 kva டிரான்ஸ்ஃபார்மரையே வெறும் ரூ. 5.48 லட்சத்திற்கு தான் வாங்கியுள்ளது என்று கூறியுள்ளோம்.
இந்த ஒப்புதலை புறந்தள்ளி தாங்கள் பதிலளித்து இருப்பது சரியா? நீங்கள் மூன்று கிலோ தக்காளி 500 ரூபாய்க்கு வாங்கியுள்ளீர்கள். ஆனால், ராஜஸ்தான் 5 கிலோ அதே தர தக்காளியை 300 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறதே என்று கேட்டால் இந்த ஒப்பீடு தவறானது என்று கூறுவது நியாயமா?
500 kva காப்பர் சுருளியுடன் தமிழக மின்வாரியம் நவம்பர் 2021 அனைத்து ஒப்பந்ததாரர்களும் 13.7 லட்சம் குறிப்பிட்டு 12.5 லட்சத்திற்கு டிரான்ஸ்ஃபார்மர் வாங்கி உள்ளார்கள். ராஜஸ்தான் அரசாங்கம் 500 kva காப்பர் சுருளி டிரான்ஸ்ஃபார்மரருக்கு அதே specification க்கு ஆகஸ்ட் 2021 இல் டெண்டர் திறக்கப்பட்டு 7.87 லட்சத்திற்கு ஒப்பந்தபுள்ளி கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை புகாரில் இணைத்து இருக்கிறோம்.