சென்னை: ஒடிசாவில் நிகழ்ந்த கோரமண்டல் ரயில் விபத்து நாட்டையே உலுக்கி வருகிறது. மேலும், அந்த ரயிலில் அதிகளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பயணித்துள்ளனர் என்ற தகவல் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது விபத்தில் சிக்கியவர்களை உறவினர்களால் தொடர்பு கொள்ள இயலாது என்ற காரணத்தால் தமிழ்நாட்டில் 2 கட்டுப்பாட்டு அறைகள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், இது குறித்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே எஸ்பி பொன்ராமு கூறுகையில், “ஒடிசாவில் நிகழ்ந்த கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் டி.எஸ்.பி, டி.ஆர்.ஓ உள்ளிட்ட பல அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஹெல்ப் லைன் மூலமாக தொடர்பு கொண்டு வருகின்றனர்.
இதுவரை கோரமண்டல் ரயிலில் சென்ற 4 நபர்களின் உறவினர்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான தகவல்களையும் அளித்துள்ளோம். தற்போது இந்த கட்டுப்பாட்டு அறையானது ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் அவர்கள் குறித்த தகவலை கேட்டால், அது குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்களை வழிநடத்தவும் தொடங்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளை பாதுகாப்பாக வழி அனுப்புவதற்காக பாதுகாப்பு பணியில் 100 ரயில்வே போலீசார், 100 ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் மற்றும் 20 கமாண்டோ பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் இன்று மாலை 7.20 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விபத்து நடந்த இடத்திற்கு ஒரு ரயில் புறப்படுகிறது. அதில் கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்த நபர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அடையாள அட்டையைக் காண்பித்து விட்டு இலவசமாக செல்லலாம்.