தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொள்ளையர்கள் அல்ல...கொலையாளிகள்: போலீஸைத் திடுக்கிட வைத்த வாக்குமூலம்! - கொள்ளை வழக்கில் நான்கு பேர் கைது

சென்னை: மருத்துவரிடமிருந்து கார், செயினைக் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்ப்பட்ட நபர்கள், இரண்டு பேரை கொலை செய்யதாக காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

robbery
robbery

By

Published : Mar 21, 2021, 10:03 AM IST

சென்னை, நந்தனம் 9ஆவது தெருவை சேர்ந்தவர் மருத்துவர் ராமகிருஷ்ணன் (72). இவர் அதே பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், மார்ச் 18ஆம் தேதி இரவு ராமகிருஷ்ணன் கிளினிக்கில் இருக்கும்போது நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி 10 சவரன் செயின், கார் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து மருத்துவர் ராமகிருஷ்ணன் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்மூலம் அடையாளம் காணப்பட்ட நபர்கள், சிவகங்கை மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினர் கண்டுபிடித்தனர். தொடர்ந்து சிவகங்கைக்கு விரைந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் சிவகங்கையைச் சேர்ந்த நெல்சன், வெங்கடேசன், ராக்கப்பன், ஸ்ரீனிவாசன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அதுமட்டுமல்லாது இவர்கள் இரண்டு பேரை கொலை செய்து குட்டையில் வீசிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியைடைந்த காவல் துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கடந்த 2015ஆம் ஆண்டு, அதிமுக பிரமுகரான ஆனந்த் ராஜ் என்பவர் ஆவடியில் 36ஆவது வார்டில் கவுன்சிலருக்காக நின்றபோது, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முருகன் என்பவர் கவுன்சிலராக வென்றார்.

இதனால் கோபமடைந்த ஆனந்த ராஜ், தனது நண்பரான அண்ணாதுரையிடம் கவுன்சிலரான முருகனை கொலை செய்யுமாறு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அண்ணாதுரை தனது கூட்டாளியான சிவகங்கையைச் சேர்ந்த தங்கபாண்டி, ராக்கப்பன், நெல்சன்,வெங்கடேசன்,ஸ்ரீனிவாசன் உள்பட ஒன்பது பேருடன் சென்று முருகனை வெட்டிக்கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ஆவடி காவல் துறையினர் ஒன்பது பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் அண்ணா துரை, தங்கபாண்டி மட்டும் பணம் செலவு செய்து ஜாமீனில் வெளியே வந்தனர். அதன் பின் ராக்கப்பன் தங்களையும் ஜாமீனில் எடுக்குமாறு அண்ணாதுரையிடம் கூறியுள்ளார். அதற்கு அண்ணாதுரை வெளியே எடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், ராக்கப்பன், சமீபத்தில் தனது கூட்டாளிகளான நெல்சன், வெங்கடேசன், ஸ்ரீனிவாசன் ஆகியோருடன் ஜாமீனில் வெளிவந்தார். அதன் பின் அண்ணாதுரை, தங்கப்பாண்டியனை சந்தித்த ராக்கப்பன், தங்களை ஜாமீனில் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை பணமாவது தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணம் தரமறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த ராக்கப்பன் தனது கூட்டாளிகளுடன் அண்ணாதுரை, தங்கபாண்டியனை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி ராக்கப்பன் தனது கூட்டாளிகளுடன் கிண்டியில் இருந்துகொண்டு அண்ணாதுரை, தங்கபாண்டியனை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இதை நம்பி அங்கு சென்ற அவர்களை கொலை செய்து, கன்னாகாபுரம் குட்டையில் வீசியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்லும் வழியில் கிளினிக்கில் புகுந்து மருத்துவரின் செயின், காரை பறித்துவிட்டு சிவகங்கைக்கு தப்பியோடியதாக வாக்குமூலம் அளித்தனர்.

இந்நிலையில், நான்குபேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். அதன்பின் கன்னிகாபுரம் குட்டையிலிருந்து அண்ணாதுரை, தங்கபாண்டியனின் உடல்களைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த ஏழுமலை, மதன் ராஜ் என்னும் இருவரையும் தற்போது காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details