புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. புதிய கல்விக்கொள்கையின் வரைவு தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து அதன்மீதான விவாதங்கள் நடைபெற்ற வண்ணமே இருந்தன. இந்தச்சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த விவதாங்கள் தீவிரமடைந்தன.
புதிய கல்விக்கொள்கையில் குறிப்பிட்டுள்ள மும்மொழிக்கொள்கையை தமிழ்நாட்டில் பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளும் எதிர்த்துள்ளன. இருந்தபோதிலும், மும்மொழிக்கொள்கையை சில கல்வியாளர்கள் ஆதரித்துள்ளனர். அதில் ஒருவராக விளங்கும் அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, மும்மொழிக்கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், மும்மொழிக் கொள்கையின் மீதான உங்கள் பார்வை என்னை வேதனையடையச் செய்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இருமொழிக்கொள்கை என்ற பெயரில் மற்ற இந்திய மொழிகளை கற்க மாணவர்கள் கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தடுக்கப்படுகிறார்கள். இருமொழிக்கொள்கையால் கடுமையா பாதிக்கப்பட்டதில் நானும் ஒருவன்.
நகர்ப்புறங்களில் சிபிஎஸ்சி பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் அவர்கள் விரும்பும் மொழியைக் கற்கும் சுதந்திரம் இருக்கும்போது, இருமொழிக்கொள்கையை வலியுறுத்துவதால் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மும்மொழிக்கொள்கையை எதிர்ப்பவர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்தியை மகிழ்ச்சியாக கற்கிறார்கள். சிலர், இந்தியை கட்டாயமாக மொழியாக கொண்டிருக்கிற சிபிஎஸ்சி பள்ளிகளையும் நடத்திவருகிறார்கள்.