தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடக்கிலிருந்து ஒரு சூரியன்.. அடுத்த பிறவியில் தமிழனாய் பிறக்கவே ஆசைபட்ட மண்டல் நாயகன் வி.பி. சிங்... - ராஜவம்சத்தில் பிறந்தாலும் அவரின் சிந்தனைகள் யாவும் ஏழை மக்களின் வாழ்க்கை குறித்தே இருந்தது

”என்னை நீங்கள் தோற்கடிக்கலாம்; ஆனால் நான் இந்த நாட்டுக்கு செய்யவேண்டியதை எப்போதோ செய்து முடித்துவிட்டேன்”, என்று பிரதமராக தனது இறுதி நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்ட சமூகநீதி காவலரான வி.பி.சிங் (விஸ்வநாத் பிரதாப் சிங்) நிகழ்த்தி காட்டிய சாதனைகள் குறித்து காண்போம்.

வடக்கிலிருந்து ஒரு சூரியன்.. அடுத்த பிறவியில் தமிழனாய் பிறக்கவே ஆசைபட்ட மண்டல் நாயகன் வி.பி. சிங்...
வடக்கிலிருந்து ஒரு சூரியன்.. அடுத்த பிறவியில் தமிழனாய் பிறக்கவே ஆசைபட்ட மண்டல் நாயகன் வி.பி. சிங்...

By

Published : Jun 25, 2022, 11:15 AM IST

சமீப காலமாகவே தற்கால இளைஞர்களின் உணர்வுகளில் ஒரு பொதுப்புத்தி கலந்துள்ளது. சாதி ரீதியான இட ஒதுக்கீடு என்பது பாவச்செயல்; அதனால் திறமையற்றவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்பதுதான் அது. இவ்வாறு சொல்பவர்களுக்கு அவர்களின் முந்தைய தலைமுறைகளின் ஒடுக்குமுறைகள் தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது தெரிந்த பின்பும் சிலரின் விஷமத்தனமான பிரசாரத்தால் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கலாம்.

எது எப்படியானாலும், பல்லாண்டு காலமாக சாதி ரீதியாக ஒரு சாரார் மட்டும் சமூகத்தின் அனைத்து பலன்களையும் அனுபவித்து கொண்டிருக்கும்போது, மற்றோரு சாராரின் வாழ்க்கைத் தரம் மேம்படாமல் கீழே சென்றுகொண்டிருப்பதை நாம் உணர்த்தியே ஆக வேண்டும். அவ்வாறு உணர்த்த வேண்டுமென்றால், இட ஒதுக்கீட்டின் அவசியத்தை, அது கிடைக்க பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தி நமக்கு பெற்றுத் தந்த தலைவர்களை நினைவுகூருவதின் மூலமாக மட்டுமே அது சாத்தியமாகும். அதில், ஒரு தலைவரின் நினைவலைகளைதான் நாம் தற்போது அசை போடவுள்ளோம்.

”என்னை நீங்கள் தோற்கடிக்கலாம்; ஆனால் நான் இந்த நாட்டுக்கு செய்யவேண்டியதை எப்போதோ செய்து முடித்துவிட்டேன்”, என்று பிரதமராக தனது இறுதி நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்ட சமூகநீதி காவலரான வி.பி.சிங் (விஸ்வநாத் பிரதாப் சிங்) நிகழ்த்தி காட்டிய அற்புதங்களைக் காண்போம்.

உத்தரப் பிரதேசத்தில் ‘தையா’ என்ற ராஜவம்சத்தில் 1931ஆம் ஆண்டு ஜுன் 25ஆம் தேதி வி.பி. சிங் பிறந்தார். ராஜவம்சத்தில் பிறந்தாலும் அவரின் சிந்தனைகள் யாவும் ஏழை மக்களின் வாழ்க்கை குறித்தே இருந்தது. அதற்கு உதாரணமாக, ஆச்சார்யா வினோபாபாவேயின் பூமிதான இயக்கத்தில் பங்கேற்ற அவர், தனது நிலங்களை தானம் அளித்ததைக் கூறலாம். சிறு வயதில் விஞ்ஞானியாக வேண்டும் என்ற அவரின் கனவை, காலம் எனும் பெரும்புயல் அரசியல் பக்கம் கரை ஒதுங்கச் செய்தது.

நாட்டில், ஒரு பிரிவினரைத் தவிர பெரும்பான்மை மக்கள் ஏழைகளாகவே இருந்ததால், அதனை மாற்ற அரசியல் அதிகாரம்தான் சரியான வழி என்று தேர்ந்தெடுத்த அவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1969ஆம் ஆண்டு உ.பி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சராகவும் செயலாற்றினார். கட்சியில் மிகப் பெரிய ஆளுமையாக உருவெடுத்த சிங், 1980ஆம் ஆண்டு உ.பி முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே:

ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் வி.பி. சிங் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற காலம், அன்றைய விஐபிகளின் இருண்ட காலம் என்றே கூறலாம். ஆம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து வைத்த பண முதலைகளின் கண்களில் விரல் விட்டு ஆட்டினார் சிங். அவர் விரல் நீட்டிய இடங்களில் எல்லாம் அமலாக்கத் துறையினர் பாய்ந்து ஆவணங்களை புரட்டி எடுத்தது அனைத்து விஐபிகளின் வயிற்றிலும் புளியை கரைத்தது. அதில் திருபாய் அம்பானி, அமிதாப் பச்சனின் சகோதரர் உள்ளிட்டோரும் அடங்குவர். வி.பி. சிங்கின் தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியாத பெரும் பணக்காரர்கள் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தியிடம் முறையிடவே, நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்பட்டார்.

மாற்றும்போது ராஜிவ் காந்திக்கு தெரியவில்லை, தன் கையே தன்னை குத்துமென்று. சிங் பாதுகாப்புத் துறை அமைச்சரான பின்னும் தன் தாக்குதலைத் தொடர்ந்தார். இந்த முறை அந்தத் தாக்குதல் பிரதமாரான ராஜிவ் காந்தி மீது தொடுக்கப்பட்டது. பாதுக்காப்புத் துறை அமைச்சராக இருந்தபோது, போஃபர்ஸ் ஊழல் (ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் முறைகேடு) வெளிவந்தது. அதில், ராஜிவ் காந்தியின் பெயரும் அடிப்பட்டத்தைத் தொடர்ந்து, வி.பி.சிங் அது குறித்து விமர்சனங்களை எழுப்பத் தொடங்கினார். அதன்பின்னர், என்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்...

ஒற்றைத் தலைமையை ஆட்டிப் பார்த்த வி.பி.சிங்கின் ’கூட்டாட்சி’ கூட்டணி:

காங்கிரஸிலிருந்து விலகிய சிங், தனிக்கட்சி தொடங்கி 1989ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு மிகப்பெரிய மாநிலக் கட்சிகளின் படை பரிவாரங்களை ஒன்றிணைத்து, போஃபர்ஸ் ஊழலை மூலதனமாகக் கொண்டு நாடு முழுவதும் காங்கிரஸுக்கு எதிராகப் பிரசாரத்தை தீவிரப்படுத்தினார். அதுவரை, மாநில கட்சிகளை மதிக்காமல் செருக்கோடு சர்வாதிகாரத்தை செலுத்திக் கொண்டிருந்த காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு சவுக்கடி கொடுத்தார் என்றால் அது மிகையாகாது. ஆம் இடதுசாரி கட்சிகள், தமிழ்நாட்டில் திமுக, தெலுங்கு தேசம், அசாம் கன பரிஷத் ஆகிய மாநில கட்சிகளை இணைத்து நாடாளுமன்றத் தேர்தலில் 143 இடங்களைப் பிடித்து, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வெளி ஆதரவால் கூட்டணி பலத்தோடு பிரதமரானார். இதனை ஜீரணிக்க முடியாமல் தன்னால் முடிந்த அனைத்து எதிர்ப்புகளையும் வெளிக்காட்டியது காங்கிரஸ்.

குறைந்த ஆட்சிக் காலத்தில் வானுயர்ந்த சாதனைகள்:

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு சில சாதனைகளை செய்வதற்கு ஐந்து ஆண்டுகள் போதுமானதாக இல்லாததால், கூடுதலாக ஐந்து ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆனால், வி.பி.சிங்கோ வெறும் 11 மாதங்கள் 8 நாட்கள் மட்டுமே பிரதமாராக இருந்து பல சாதனைகளை நிகழ்த்தி காட்டியுள்ளார். அதில், முதன்மையானது ‘மண்டல் கமிஷன்’.

மண்டல் கமிஷன் அறிக்கை ஓர் மீள் பார்வை:

1979ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசு, அரசியலமைப்பு 340இன் கீழ் நாடு முழுவதும் கல்வியிலும் சமுதாயத்திலும் பிற்படுத்தப்பட்டவர்களின் (Backward Class) நிலை குறித்து ஆராய, பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் என்பவரின் தலைமையில் குழு அமைத்தது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அக்குழு, 1980ஆம் ஆண்டு முழு அறிக்கையை அரசிடம் ஒப்படைத்தது. இந்தியா முழுவதும் 52 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளார்கள். அவர்களில் வெறும் 12.5 விழுக்காட்டினர் மட்டுமே உயர் பதவிகளில் உள்ளனர். மீதமுள்ள அனைவரும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். எனவே, இந்தச் சமநிலையற்ற நிலையை மாற்றுவதற்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மண்டல் தலைமையில் இக்குழு செயல்பட்டு அறிக்கை சமர்பித்ததால், ‘மண்டல் கமிஷன் அறிக்கை’ என்று பெயர் பெற்றது.

கண்டுகொள்ளாத காங்கிரஸ், தூசி தட்டிய வி.பி.சிங்:

ஜனதா கட்சி ஆட்சி வீழ்ந்த பின் வந்த இந்திரா காந்தியும் ராஜிவ் காந்தியும் மண்டல் அறிக்கையை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டனர். அதன்பின், பிரதமரான வி.பி.சிங், 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அறிக்கையை கையிலெடுத்து, அதன்படி இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். இது சமூகநீதியின் மிக முக்கிய மைல்கல்லாக பார்க்கப்பட்டது; இனியும் பார்க்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தியதில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதிக்கு அளப்பரிய பங்குண்டு.

வி.பி.சிங்கின் இந்த அறிவிப்பு இடதுசாரி கட்சிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்திய வலதுசாரி கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. இதனால் வட மாநிலங்களில் கலவரங்கள் வெடித்த போதும், அப்போது சிங்கின் அரசுக்கு ஆதரவளித்த பாஜக வாபஸ் வாங்குவோம் என மிரட்டிய போதும், தன் முடிவில் பின்வாங்காமல் நெஞ்சுரத்துடன் செயல்பட்டார் வி.பி.சிங்.

அதன் விளைவாக, பாஜக சிங்கின் அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெற்றதால், அவர் ஆட்சி பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. தன் பதவியே பறிபோனாலும் சரி, எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியே தீருவேன் என்று செயல்பட்டு, அதில் வெற்றியும் கண்டார். அவர் கண்ட வெற்றி அவருக்கானது மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மக்களுடையது. வி.பி.சிங் எனும் தனிப்பெரும் ஆளுமையை நினைக்காமல் சமூகநீதி குறித்து பேசிவிட முடியாது.

மண்டல் குழுவின் அறிக்கை இரு நாடாளுமன்ற அவைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், உச்ச நீதிமன்றத்தில் அதற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. 11 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் முன்னிலையில் மூன்று ஆண்டுகள் நடைபெற்ற இவ்வழக்கில், 6 - 5 என்ற கணக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஆறு நீதிபதிகள் பரிந்துரையை ஏற்றுக்கொண்டும், 5 நீதிபதிகள் அதனை எதிர்த்தும் தீர்ப்பளித்தனர். இதனால், 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நாடு முழுவதும் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. தான் ஆட்சியில் இல்லாவிட்டாலும், இந்த தீர்ப்பின் மூலம் பெரும் மகிழ்ச்சியுற்றார் வி.பி.சிங்.

வி.பி.சிங்கின் சாதனைகள்

  • இந்திய அரசியலமைப்பின் தந்தையாக அண்ணல் அம்பேத்கர் இருந்தாலும், எந்த அரசு மரியாதையும் வழங்கப்படாமல் இருந்ததைக் கண்ட சிங், அவருக்கு ’பாரத ரத்னா’ பட்டம் வழங்க ஏற்பாடு செய்தார். மேலும், நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் படத்தை இடம்பெறவும் வைத்தார்.
  • ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கைக்கு சென்றிருந்த இந்திய ராணுவத்தை திரும்ப பெற்ற வி.பி.சிங்கிடம், செய்தியாளர்கள் விடுதலைப் புலிகளை தீவிரவாத இயக்கம் என்பதாக ஒரு கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர் , எவரையும் தீவிரவாதி என முத்திரை குத்தும் ரப்பர் ஸ்டாம்ப் தனது பாக்கெட்டில் இல்லை என்று பளிச்சென்று பதிலளித்தார்.

சென்னை மீனம்பாக்கத்திலுள்ள வெளிநாட்டு விமான தளத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான தளத்துக்கு காமராஜர் பெயரும் சூட்டவேண்டும் என்று மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்ததும், அந்த வேண்டுகோளை ஏற்று அதனை விழா மேடையிலேயே அறிவித்தார் வி.பி.சிங். மேலும் கருணாநிதியின் வேண்டுகோளின் பேரில் காவிரி நடுவர் மன்றம் அமைத்திட உத்தரவிட்டதும் வி.பி.சிங்கே. இவ்வாறு பல்வேறு சாதனைகளைச் செய்த ’சமூகநீதி காவலன்’ வி.பி.சிங், மண்டல் கமிஷன் அமல்படுத்திய பின் தன் பதவி பறிபோகும் என்று தெரிந்த பின்னும் கூறிய வார்த்தைகள் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியவை.

“நல்ல பொருளை வாங்க வேண்டுமென்றால் அதிக விலை கொடுக்க வேண்டும்”என்பதே அது!

நடிகர் சிவாஜியின் ஃபேமஸ் வசனமான “விதை நான் போட்டது” என்ற வசனம் வி.பி.சிங்குக்கே பொருத்தமாக இருக்கும். அவர் மறைந்தாலும் அவரின் சிந்தனைகள் ஏதோ ஒரு தளத்தில் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இட ஒதுக்கீட்டை நீக்க முடியாமல் தவித்து வரும் உயர் சாதியினர் பல்வேறு தாக்குதலை அதன் மீது தொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் முக்கியமானது, நீட் போன்ற தகுதித் தேர்வுகள், ’பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு போன்றவை.

இவற்றையெல்லாம், எதிர்த்து செயல்பட வி.பி.சிங் போன்ற தனிப்பெரும் ஆளுமைகளின் செயல்கள் குறித்த விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். குறுகிய காலத்தில் பிரதமர் பதவியிலிருந்தாலும், அப்பதவிக்கான நியாயத்தைச் செய்த வி.பி.சிங்கின் பிறந்த நாள் இன்று!

குறிப்பு :கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஈடிவி பாரத்தில் வெளி வந்த கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘அடுத்த பிறவியில் தமிழனாய் பிறக்கவே ஆசை’ - சமூகநீதியை சுவாசித்த பிரதமர் அவர்..!

ABOUT THE AUTHOR

...view details