''கட்சியின் சட்டதிட்டம் தெரியும்; கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்'' சென்னை: அதிமுக கட்சியில் ஒழுங்கு நடவடிக்கையால் கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி அன்வர் ராஜா இன்று (ஆகஸ்ட் 4) மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்வர் ராஜா, "எல்லோரோடும் ஒத்துப் போகாத ஒருவன் இறந்தவனுக்கு சமமாவான் என திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார். ஒரு மிகப்பெரிய இயக்கம் அந்த இயக்கத்தை தோற்றுவித்ததில் ராமநாதபுரம் மாவட்டத்தில் என் பங்கு உண்டு.
மேலும், எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாளிலிருந்தே நான் ஒன்றிய கழகச் செயலாளர், மாவட்ட செயலாளர், அமைப்புச் செயலாளர், சிறுபான்மை அணிச் செயலாளர், இப்படி எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கபட்டவன், அப்படி இருந்த சூழ்நிலையில் என் வாழ்வில் ஒரு சிறிய சறுக்கல் ஏற்பட்டது. தற்போது மீண்டும் அதிமுகவின் பொதுச் செயலாளர் தலைமையில் இணைந்துள்ளேன். கட்சியின் சட்ட திட்டம் என்ன என்று தெரியும்; கட்சியின் வளர்ச்சிக்கு நான் பாடுபடுவேன்" எனக் கூறினார்.
மேலும், அதிமுக தோல்விக்கு பாஜக கூட்டணி தான் காரணம் என விமர்சனம் செய்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அன்வர் ராஜா, "ஒரு கட்சியை விமர்சிப்பது என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. இன்றும் கூட பாஜகவின் தலைவர்கள் அதிமுகவை விமர்சிக்கத் தான் செய்கிறார்கள். ஆனால், கூட்டணி என்பதை முடிவு செய்ய வேண்டியது இரு கட்சியின் தலைவர்கள் தான். இதுவரை எல்லா கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள், காங்கிரஸ் கட்சியைத் தவிர... திமுக - பாஜக கூட்டணி பின்னி பிணைந்து இருந்தது.
ஆனால், நாங்கள் அவ்வாறு இல்லை; கொள்கைக்கு ஏதேனும் இடர்பாடு ஏற்படுமானால் உடனடியாக அந்த கூட்டணியில் இருந்து விலகுவதற்கு அண்ணா திமுக தயங்கியது இல்லை. பத்து நாள்கள் டெல்லியில் இருந்து தங்கி அங்கே பாஜக ஆட்சியைக் கவிழ்த்தவர் ஜெயலலிதா. கட்சியில் இந்த ஒன்றரை ஆண்டுகள் இல்லாமல் இருந்தது வருத்தம் அளிக்கவில்லை. நான் கட்சிக்காரனாகத்தான் இருந்தேன். எல்லா கட்சிகாரர்களும் என்னுடன் பேசிக் கொண்டு தான் இருந்தார்கள். அவர்களின் எல்லா விசேஷங்களுக்கும் சென்று கொண்டு தான் இருந்தேன்.
எனக்கு கட்சியில் எந்த முக்கியதுவமும் தேவை இல்லை. என்னுடைய பெயர், என்னுடைய தோற்றம், எனது பெயரை அறிமுகப்படுத்திய எம்ஜிஆர், ஜெயலலிதா கொடுத்ததே மிகப் பெரிய அடையாளம். நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:Sellur Raju: கட்சியை விட்டு சென்றவர்களை மிதித்துவிட்டு செல்வோம்: சீண்டும் செல்லூர் ராஜூ