தமிழ்நாடு

tamil nadu

எஸ்.பி.வேலுமணியை கைது செய்ய வேண்டும் - மநீம மாநில செயலாளர்

By

Published : Aug 17, 2021, 7:45 AM IST

உள்ளாட்சித் துறையில் வரலாறு காணாத ஊழல் செய்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கோரிக்கை வைத்துள்ளார்.

எஸ்.பி.வேலுமணியை கைது செய்ய வேண்டும்
எஸ்.பி.வேலுமணியை கைது செய்ய வேண்டும்

சென்னை:இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டெண்டர்களில் தில்லு முல்லு செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும்படி செய்தார் என்று தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை நிரூபிக்கும் வகையில், பலநூறு கோடிக்கு ஊழல் நடந்ததுள்ளன என்பதை அறப்போர் இயக்கம் வலுவான ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்புள்ள இடங்களில் சோதனை நடத்தியுள்ளது. ஆனால், எஸ்.பி.வேலுமணியோ சர்வ சுதந்திரமாக தமிழ்நாடு முழுக்க சுற்றிவந்து ‘சத்ரு சம்கார’ யாகங்கள் செய்துகொண்டிருக்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறை பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கை, வெளியாகியுள்ள ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், எஸ்.பி.வேலுமணி செய்திருப்பது சாதாரண ஊழல் இல்லை.

முறைகேட்டுப் பட்டியல்

ஒரே ஐபி எண்கள் கொண்ட கம்ப்யூட்டரில் இருந்து சகோதர நிறுவனங்களின் பெயர்களில் இருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளது. டெண்டர் எடுத்த தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அசுரவளர்ச்சி அடைந்துள்ளன. பலநூறு கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் முறைகேடாகக்
கொடுக்கப்பட்டுள்ளன. தனக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் விதிமுறைகள் தாராளமாக
தளர்த்தித் தரப்பட்டுள்ளது. இப்படி முறைகேட்டுப் பட்டியல் விரிவாகப் போகிறது.

எஸ்.பி.வேலுமணியை கைது செய்ய வேண்டும்

இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியும், எஸ்.பி.வேலுமணியின் 'அசுர பலத்தை' மனதில் கொண்டும் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாகக் கைது செய்யவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள், அலுவலங்கள் போன்றவற்றில் கடந்த 10 மற்றும் 11ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ. 811 கோடி அளவுக்கு ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றது.

இதேபோல், சென்னை எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்த எஸ்.பி.வேலுமணியிடமும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

எஸ்.பி.வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பின்னர் முதன்முறையாக எஸ்.பி.வேலுமணி ஆகஸ்ட் 14ஆம் தேதி கோவை திரும்பினார். அவருக்கு அதிமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமானநிலையத்தில் இருந்து தொண்டர்கள் மத்தியில் அவர் ஊர்வலமாக வந்தார்.

இதையும் படிங்க:சென்னையில் தெரு விளக்கு பராமரிப்பிற்கான டெண்டர் ரத்து

ABOUT THE AUTHOR

...view details