சென்னை : கடந்த 2006 - 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, விடுதலை செய்து கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017ஆம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் 39 சாட்சிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50 லட்ச ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அது கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ராஜ கண்ணப்பனிடன் ஒப்படைக்கப்பட்டது.