சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது. கடந்த 20ஆம் தேதி தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜமன் 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து 22 ஆம் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டு தமிழக சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (மார்ச் 23) தமிழக சட்டப்பேரவையில் 2023 - 24 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் விவாதக் கூட்டம் நடைபெற்றது. முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெய்ராம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து கேள்வி நேரம் இல்லாமல், நேரமில்லா நேரம் முதலில் நடத்தப்பட்டு. பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பட்டட ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில் நேற்று (மார்ச். 23) இரண்டாவது முறையாக ஆன்லைன் சூதாட்ட மசோதாவை தாக்கல் செய்து முதலமைச்சர் பேசினார். தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் சட்டப் பேரவையில் நடைபெற்றது.