சென்னை:அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று(மே.8) நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அதிமுகவை மீட்க இருவரும் இணைந்து செயல்படவுள்ளதாக தெரிவித்தனர். தமிழக அரசியலில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் நிகழ்ச்சி இன்று சென்னை ராயபுரத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பின்னர், அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் சந்திப்பை கவுண்டமணி, செந்தில் சந்தித்தால் எப்படி காமெடியாக இருக்குமோ, அப்படித்தான் மக்கள் பார்ப்பார்கள். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதால் அதிமுகவிற்குப் பாதிப்பு கிடையாது. டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு என்பது இரண்டு அமாவாசைகள் சந்திப்பது போன்றது.
2017ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தை எதிர்த்து, ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். சசிகலா சிறை சென்ற போது மீண்டும் அவரை அதிமுகவில் இணைத்து ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கினோம். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ஓபிஎஸ் அழுத்தத்தால் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் விசாரணைக்காக பலமுறை ஓபிஎஸ்ஸிற்கு சம்மன் அனுப்பியும், அவர் அதில் ஆஜராகவில்லை. இறுதியில் ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு சந்தேகம் இல்லை எனவும், மக்களுக்கு சந்தேகம் இருந்ததாகவும் கூறினார்.
எந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினாரோ, அதே குடும்பத்துடன் தற்போது கைகோர்த்துள்ளார். எந்த இடத்திலும் நம்பிக்கையில்லாமல் செயல்பட்டதால் ஓபிஎஸ் ஒரு துரோகி. எந்த காலத்திலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் சேர்க்க மாட்டோம்.